‘நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன்’ – பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் தெரிவிக்கும் ஹர்பஜன் சிங்!

சென்னை : இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயலாற்ற, இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் விருப்பம் தெரிவித்து உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் யார் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் பிசிசிஐ நடத்தி வருகிறது. தற்போதைய பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வருகிற டி20 உலகக்கோப்பைக்கு பிறகு முடிவடைந்து விடும். டிராவிட் மீண்டும் இந்த பதவிக்கு விண்ணப்பிப்பதில் ஆர்வம் காட்டாமல் இருப்பதால் இந்த தேடுதல் மிகத்தீவிரம் அடைந்து உள்ளது.
இந்த பதவிக்கு இவர் சரியாக இருப்பர் என பல கிரிக்கெட் ஜாம்பவான்களின் பெயர்கள் அடிபட்டு கொண்டே வருகிறது. ஒரு முனையில் முன்னாள் நியூஸிலாந்து வீரரும் தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக செயலாற்றி வரும் ஸ்டீபன் ப்ளெமிங்கிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
மேலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஆலோசகராக செயலாற்றி வரும் கவுதம் கம்பீரையும் இந்த பொறுப்புக்கு பணியாற்ற வைப்பதற்கும் பிசிசிஐ பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக பல தகவல்கள் வெளியானது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு செயலாற்றுவது தனக்கு மகிழ்ச்சி தான் என அவரது விருப்பத்தை பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.
அவர் பேசுகையில், “நான் இந்த பதவிக்கு விண்ணப்பிப்பேனா என்று எனக்குத் தெரியவில்லை. இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி என்பது இந்தியா வீரர்களுக்கு அளிக்கும் பயிற்சியை தாண்டி அவர்களுக்கு சில வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்பது தான். மேலும், கிரிக்கெட் எனக்கு நிறைய கொடுத்துள்ளது அதே போல நானும் கிரிக்கெட்டுக்கு கொடுக்க விரும்பகிறேன் ஒரு வாய்ப்பு கிடைத்தால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன்”, என்று அந்த பேட்டியில் ஹர்பஜன் சிங் கூறி இருந்தார்.