“தோனியை நான் மன்னிக்கவே மாட்டேன்” – யுவராஜ் தந்தை யோக்ராஜ் சிங் ஆவேசம்!
தோனியால் தான் என் மகன் வாழ்க்கை அழிந்துவிட்டது அதனால் அவரை நான் மன்னிக்கவே மாட்டேன் என யோக்ராஜ் ஆவேஷமாக பேட்டி அளித்துள்ளார்.
சென்னை : இந்திய அணியின் முன்னாள் வீரர்களான தோனி மற்றும் யுவராஜ் சிங், இவர்களுக்கும் இடையே பல கருத்து வேறுபாடுகள் இருந்ததாக பல தகவல் அந்நாட்களில் பேசப்பட்டு வந்தது. இது ஒரு புறம் இருந்தாலும் கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை மற்றும் 2011-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை என இரண்டு முக்கிய கோப்பைகளை இந்தியா வெல்வதற்கு யுவராஜ் சிங் மற்றும் தோனி இருவரும் மிகமுக்கிய காரணிகளாக அமைந்தனர்.
மேலும், இருவரையும் தாண்டி ஒட்டுமொத்த அணியுமே மிகச்சிறப்பாக விளையாடியதால் தான் அந்த 2 கோப்பையும் இந்திய அணி கைவசப்படுகித்தியது. இந்த நிலையில் 2011-ம் ஆண்டு உலகக்கோப்பைக்குப் பிறகு அதிரடி வீரரான யுவராஜ் சிங்கிற்கு புற்று நோய் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பல போராட்டங்களுக்குப் பிறகு யுவராஜ் அந்த புற்று நோயிலிருந்து விடுபட்டு வந்தார். ஆனால், அதன் பிறகு இந்திய அணியில் இடம்பெறுவதற்கு அவருக்குச் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதைப் பற்றி அப்போதே யுவராஜின் தந்தை ஒரு சில பேட்டிகளில், ‘தோனி தான் என் மகனை அணியில் இடம்பெற செய்யவில்லை’ என தாக்கி பேசியிருப்பார். தற்போது, தனியார் யூட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்த அவர் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் தோனியைத் தாக்கி பேசியிருக்கிறார். இது குறித்துப் பேசிய அவர், “நான் தோனியை மன்னிக்கவே மாட்டேன். அவர் அவரது முகத்தைக் கண்ணாடியில் பார்க்க வேண்டும்.
அவர் மிகப்பெரிய கிரிக்கெட் வீரர் தான். ஆனால், அவர் எனது மகனுக்கு எதிராகச் செயல்பட்டு இருக்கிறார். தற்போது, எல்லா விஷயமும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. அதை என் வாழ்க்கையில் மன்னிக்கவே முடியாது. இரண்டு விஷயங்களை நான் என் வாழ்க்கையில் செய்யமாட்டேன். ஒன்று, எனக்கு எதிராகச் செயல்பட்டவர்களை நான் மன்னிக்கவே மாட்டேன். அவர்களை அணைக்கவும் மாட்டேன். அது எனது குடும்ப உறுப்பினர்களாக இருந்தாலும் சரி அல்லது என் குழந்தைகளாக இருந்தாலும் சரி.
தோனி எனது மகனின் வாழ்க்கையையே அழித்து விட்டார். யுவராஜ் இன்னும் ஒரு 4 அல்லது 5 ஆண்டுகள் விளையாடி இருப்பார். கவுதம் கம்பீர் மற்றும் வீரேந்தர் சேவாக் கூட இதற்கு முன் ஒரு பேட்டியில் இன்னொரு யுவராஜ் சிங் நமக்கு கிடைக்க மாட்டார் எனக் கூறி இருந்தார்கள். மேலும், அவர் புற்று நோய்க்கு எதிராகப் போராடி பின் மீண்டும் இந்தியாவுக்காக விளையாடியதற்காகவும் உலகக்கோப்பை வென்று கொடுத்ததற்காகவும் அவருக்குப் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்”, என்று யோக்ராஜ் கூறி இருந்தார்.