‘அதுக்கு தான் முன்னுரிமை கொடுப்பேன்’! ஐசிசி தலைவர் ஜெய்ஷா உறுதி!
சென்னை : ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்ற ஜெய்ஷா, தான் இந்த கிரிக்கெட் ஃபார்மட்டிற்கு தான் முன்னுரிமை கொடுப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
ஐசிசி தலைவராக எந்த வித போட்டியுமின்றி ஜெய்ஷா தேர்வாகியுள்ளார். இதனால் வரும் டிசம்பர்-1 முதல் ஐசிசி தலைவராக ஜெய்ஷா பொறுப்பேற்க உள்ளார். 35 வயதில் ஐசிசியின் தலைவராகப் பொறுப்பேற்கப் போகும் இளம் தலைவர் இவர் தான் எனப் பெருமையும் இவர் பெற்றுள்ளார். ஜெய்ஷா, பிசிசிஐ-யின் செயலாளராகப் பொறுப்பேற்ற பின் பல மாற்றங்களை இந்திய அணியில் கொண்டுவந்துள்ளார்.
மேலும், இந்திய அணியைப் பல மாற்றங்கள் செய்து ஒரு வலுவான அணியாகவும் மாற்றி இருக்கிறார். இந்திய அணியைத் தொடர்ந்து உலகம் முழுவதும் அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஐபிஎல் தொடரிலும் பலபுதிய விதிகளைக் கொண்டு வந்துள்ளார், பல மாற்றங்களையும் செய்துள்ளார். இதனால், இவர் தற்போது ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றால் சர்வேதச அளவில் கிரிக்கெட்டை மேலும் பிரபலமடையச் செய்வார் எனப் பலரும் கூறி வந்தனர்.
இந்த நிலையில், ஐசிசி தலைவராக ஜெய்ஷா தற்போது புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், “டி20 கிரிக்கெட் என்பது அனைவருக்கும் சுவாரஸ்யம் தருகின்ற கிரிக்கெட்டாக இருக்கலாம். இருப்பினும் கிரிக்கெட்டின் அடித்தளமான டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நான் பதவியில் இருக்கும் வரை முன்னுரிமை அளிப்பேன். எனது முயற்சிகள் மற்றும் பணிகள் அது சார்ந்தே இருக்கும்.
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் விளையாட்டின் தரத்தை உயர்த்தும் வகையில் என்னால் முடிந்த அனைத்து பணியையும் நான் மேற்கொள்வேன். இந்த முக்கிய பொறுப்பில் இருக்கும் வரை என் மீது உள்ள எதிர்பார்ப்புகளை நான் பூர்த்தி செய்வேன். ஐசிசி-க்கு தலைமை தாங்குவது சிறப்பான விஷயம் ஆகும்.
மேலும், மகளிர் கிரிக்கெட் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போன்றவற்றின் மேம்பாடு சார்ந்தும் கவனம் செலுத்தப்படும். இதில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து சிறந்த பயணத்தைத் தொடங்குவோம்”, என்று ஜெய்ஷா அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.