‘அந்த செய்தியை கேட்டதும் கண் கலங்கினேன்’! மனம் திறந்த ரவி சாஸ்திரி!!
ரவி சாஸ்திரி: 2024 ஆண்டிற்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி வெறும் 119 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிலும் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 43 ரன்கள் எடுத்திருந்தார், மேலும் ஃபீல்டிங்கில் 2 அற்புதமான கேட்சுகளையும் பிடித்தார். அதன் பிறகு பேட்டிங் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 120 ரன்கள் கூட எடுக்கமுடியாமல் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருப்பார்கள்.
இந்த போட்டி முடிவடைந்த பிறகு ஐசிசி, அந்த போட்டியில் சிறந்த ஃபீல்டருக்கான விருதை ரிஷப் பண்ட்டிற்கு வழங்கியிருப்பார்கள். அந்த விருதை இந்தியா அணியின் முன்னாள் வீரரான ரவி சாஸ்த்ரி வழங்கியிருப்பார். அங்கு அவர் ரிஷப் பண்ட் குறித்து உருக்கமான விஷயங்களை பேசி இருந்தார். அவர் கூறியதாவது, “ரிஷப் பண்ட் இந்த போட்டியில் ஒரு அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அவருடைய விபத்து செய்தியை கேட்ட போது கண் கலங்கினேன். மேலும், அவரை மருத்துவமனையில் அந்த நிலையில் பார்த்த போது மேலும் கலங்கினேன். இருப்பினும் அங்கிருந்து ஒரு கம்பேக் கொடுத்த அவர் இன்று இந்தியா – பாகிஸ்தான் என்ற மிகப்பெரிய போட்டியில் விளையாடியது என் இதயத்தை தொட்டிருக்கிறது.
அவருடைய பேட்டிங் பற்றி அனைவருக்குமே தெரியும். அவர் ஒரு துருப்பு சீட்டாக அமைந்துள்ளார். ஆனால், அறுவை சிகிச்சை முடிந்ததும் கடினமான பிட்சுக்கு கீப்பிங்கை இவ்வளவு வேகமாக செய்வது அவருடைய கடின உழைப்புக்கான பரிசாகும். இது உங்களுக்கு மட்டுமல்லாமல் உலக அளவில் இருக்கும் லட்சக்கணக்கானவர்களுக்கு உத்வேகத்தை தூண்டுவதற்கு கொடுக்க கூடியது. இந்த வேலையை மேலும் தொடருங்கள்” என்று அவர் கூறினார்.