‘அவரின் கிரிக்கெட் பயணத்திற்கு நிலத்தை விற்றேன்’ ..வைபவ் சூர்யவன்ஷியின் தந்தை பேச்சு!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 13 வயது வீரராக ஏலத்தில் தேர்வாகி இருந்த வைபவ் சூர்யவன்ஷியின் தந்தை பேட்டியளித்துள்ளார்.
பாட்னா : கடந்த 2 நாட்களாக ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற்று வந்தது. 477 வீரர்களை உள்ளடக்கிய இந்த மெகா ஏலத்தில் 10 அணிகளும் மிகத்தீவிரமாக தங்கள் அணிக்கான வீரர்களை எடுத்தனர். இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த ஏலத்தில் இரண்டாம் நாளில் 13 வயதுள்ள வீரரான வைபவ் சூர்யவன்ஷியை ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்தது.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் மிக குறைவான வீரராக வைபவ் தேர்வானவர் என்ற பெருமையையும், சாதனையும் படைத்தார். இதனால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அவர் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். மேலும், இவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து இவரது பெயர் வைரலாக பரவிய நிலையில் அந்த இளம் வீரர் வைபவின் தந்தையான சஞ்சீவ் தனியார் பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், தன் மகன் கடுமையாக உழைப்பவர் என அவர் கூறியிருக்கிறார். அவரது மகனை குறித்து அவர் கூறியதாவது, “என் மகன் வைபவ் இப்போது எனது மகன் மட்டும் இல்லை, அவர் இந்த பீகாரின் மகன்.
என் மகனிடம் நிறைய திறமை இருக்கிறது, அவர் மிகவும் கடினமாக உழைக்கிறார். வைபவ் தனது 8 வயதிலே 16 வயத்துக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் தேர்வாகி சிறப்பாக விளையாடினார். மேலும், அவரின் கிரிக்கெட் வளர்ச்சிக்கு அதிக பணம் தேவைப்பட்டது. அதனால், நான் எனது விவசாய நிலத்தை விற்றுவிட்டேன்.
ஆனாலும், பொருளாதார ரீதியாக நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம். தற்போது என் மகன் ஐபிஎல் தொடருக்கு தேர்வாகியிருக்கிறார். இதனால், எங்கள் வாழ்க்கையின் நிலைமை மாறும் என நினைக்கிறன்”, என வைபவ் சூர்யவன்ஷியின் தந்தை சஞ்சீவ் கூறி இருக்கிறார்.