“அந்த ஃபார்மட் கிரிக்கெட் தான் மிகவும் பிடிக்கும்” – மனம் திறந்த நடராஜன் !
தமிழக வேக பந்து வீச்சாளரான நடராஜன் தனக்கு இந்த கிரிக்கெட் ஃபார்மட் தான் பிடிக்கும் என்று பேட்டியில் கூறியிருக்கிறார்.
சென்னை : இந்திய வேக பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான நடராஜன் தனக்கு வெள்ளை பந்து கிரிக்கெட்டை விட டெஸ்ட் போட்டிகள் தான் மிகவும் பிடித்தது என தற்போது அவர் கொடுத்த ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
இடது கை வேக பந்து வீச்சாளரான நடராஜன் ஒரு டெஸ்ட் போட்டி, 2 ஒருநாள் போட்டி சொல்லப்போனால் இந்திய அணிக்காக அதிகமாக போட்டிகளில் விளையாடியதில்லை. அவர் முதலாகவும் கடைசியாகவும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடி இருந்தார்.
அதிலும் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு இவரது பவுலிங் ஸ்பெல் ஒரு முக்கியமான காரணமாகும். அந்த போட்டியில் பந்து வீசிய இவர் 78 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார்.
அந்த போட்டியின் முடிவில் அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக தொடர்ந்து இந்திய அணியிலோ மற்ற தொடர்களிலோ விளையாட முடியாமல் போனது. அதன்பிறகு, கடந்த 2023 ஆண்டு இறுதியில் அவர் மீண்டும் ரஞ்சி கோப்பை தொடரில் களமிறங்கினார். ஆனால், அவர் இந்திய அணிக்காக விளையாடவில்லை.
மேலும், அடுத்ததாக இந்த ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக ஒரு தரமான விளையாட்டை வெளிப்படுத்தி இருந்தார். ஆனாலும், தற்போது நடைபெறும் துலீப் ட்ராபி தொடரிலும், நடைபெறும் போகும் வங்கதேச டெஸ்ட் தொடரிலும் அவர் இடம்பெறவில்லை. இது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே அமைந்தது.
இந்த நிலையில் அவர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு தான் தனக்கு மிகவும் பிடிக்கும் என கூறி இருந்தார். இது குறித்து பேசிய அவர், “நான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் விளையாடி கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆகிவிட்டது.
அதற்கு காரணம் நான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்பவில்லை என்பதல்ல, அது எனது பணிச்சுமையை அதிகப்படுத்துவதாக உணர்கிறேன். தற்போது, ரெட் பால் கிரிக்கெட்டைத் தவிர்த்து வருகிறேன். டெஸ்ட் கிரிக்கெட் அதிக நேரம் விளையாடுவதால் எனக்கு முழங்காலில் பிரச்சனை ஏற்படுகிறது. அதனால், அதை விளையாடுவதை தற்போதைக்கு நிறுத்திவிட்டேன்.
ஆனால், வைட் பால் (ஒருநாள் & டி20) கிரிக்கெட்டை விட சிவப்பு-பந்து கிரிக்கெட்டை நான் அதிகம் விரும்புகிறேன். நான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் போது, அதை மிகவும் ரசித்தேன். நான் திட்டமிட்டபடி பயிற்சி செய்தால் அடுத்த இரண்டு வருடங்களில் இந்திய அணிக்கு திரும்பலாம்.
அதனால், நான் இந்திய அணிக்கு மீண்டும் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இருந்தாலும் இப்போது, நான் வெள்ளை பந்து கிரிக்கெட்டுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறேன்”, என அந்த பேட்டியில் நடராஜன் கூறியிருந்தார்.