“பாராட்டதான் செஞ்சேன் அவரு அப்படி நடந்துக்கிட்டாரு”..சிராஜ் செயல் குறித்து டிராவிஸ் ஹெட்!
சிராஜிடம் நீங்கள் நன்றாக பந்துவீசினாய் என்று தான் சொன்னேன் என டிராவிஸ் ஹெட் ஆட்டம் முடிந்த பிறகு விளக்கம் அளித்தார்.
அடிலெய்ட் : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான இரண்டாவது போட்டி தற்போது அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாள் ஆட்டத்தில் பெரிய அளவில் கவனிக்க வைக்கும் சம்பவம் ஒன்றும் நடந்தது.
அது என்னவென்றால், போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த டிராவிஸ் ஹெட் சிராஜ் வீசிய பந்தில் 140 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆஸ்ரேலியா அணியில் தொடர்ச்சியாக விக்கெட் விழுந்து கொண்டு இருந்த சமயத்தில் திடீரென களத்தில் இறங்கிய டிராவிஸ் ஹெட் நிதானம் கலந்த அதிரடி ஆட்டத்தால் இந்திய பந்துவீச்சாளர்களை திணற வைத்தார் என்றே சொல்லலாம்.
ஒரு பக்கம் டிராவிஸ் ஹெட் ரன்கள் எடுத்து வந்தது அவருடைய அணி வீரர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் மற்றொரு பக்கம் இந்திய பந்துவீச்சாளர்களுக்கு அவருடைய விக்கெட்டை எடுத்தால் தான் சரியாக இருக்கும் என யோசிக்க வைத்தது. அப்படி பந்துவீச வாய்ப்பு கிடைத்தபோது 81-வது ஓவரை சிராஜ் வீசுவதற்கு வந்தார். அந்த ஓவரின் 4-வது பந்தை எதிர்கொண்ட ஹெட் போல்ட் ஆனார்.
விக்கெட் எடுத்த குஷியில் சிராஜ் தனது வழக்கமான கொண்டாட்டமான ஆக்ரோஷத்துடன் ஹெட்டை வெறுப்பேற்றும் வகையில் “எவ்வளவு நேரம் விளையாடினாய் வெளியில் கோ” என்பது போல சைகை காட்டினார். ஆனால், ஹெட்டும் அவரிடம் எதோ பேசுவது போலவும் இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியானபோது தெரிந்தது.
இந்த சூழலில், அங்கு என்ன நடந்தது? சிராஜிடம் பேசியது என்ன என்ற கேள்விகளுக்கு ஹெட் விளக்கமும் அளித்துள்ளார். இன்றைய நாள் ஆட்டம் முடிந்த பிறகு பேசிய ஹெட் ” நான் அவருடைய பந்துவீச்சை பார்த்து நீங்கள் நன்றாக பந்து வீசி இருக்கிறீர்கள் என்று தான் சொன்னேன். அவரை பாராட்டதான் செய்தேன். ஆனால், அவர் அதனை தவறாக புரிந்துகொண்டு என்னிடம் அப்படி நடந்து கொண்டார். அப்படி செய்து தான் அவர் தன்னை பிரபலப்படுத்திக்க வேண்டும் என்றால் அப்படியே செய்யட்டும்” என தெரிவித்தார்.
இந்த போட்டியில் மட்டுமில்லை பல போட்டிகளில் சிராஜ் விக்கெட் எடுத்தபிறகோ அல்லது கேட்ச் பிடித்த பிறகோ எதிரணி வீரர்களை கோபமடைய செய்யும் வகையில் கொண்டாட்டம் செய்கிறார். இது அவர்களை மட்டும் காயப்படுத்தாமல் சிராஜின் ரசிகர்களையே கோபமடையும் வகையில் செய்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.