நான் இதை செய்யனும்னு தான் வந்தேன் !! போட்டிக்கு பின் சிஎஸ்கே கேப்டன் பேசியது என்ன ?
Ruturaj Gaikwad : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி ராஜஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து போட்டி முடிந்த பிறகு வெற்றியின் காரணத்தை பற்றி சிஎஸ்கே அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் வெற்றியின் காரணத்தை பற்றி பேசி இருந்தார்.
ஐபிஎல் தொடர் கடைசி கட்டத்தை நெருங்கி உள்ளது, இதில் நேற்று நடைபெற்ற பகல் போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இதனால் சென்னை அணி பந்து வீச தொடங்கியது, சென்னை அணியின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ராஜஸ்தான் அணி ரன்ஸ் எடுக்க திணறியது.
அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி தட்டு தடுமாறியே ரன்களை சேர்த்தது மறுமுனையில் ரியான் பராக் மட்டும் தனி ஆளாக நின்று ரன்களை சேர்த்து கொண்டிருந்தார். இறுதியில் 20 ஓவருக்கு 5 விக்கெட்டுகளை இழந்து வெறும் 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. 141 என்ற எளிய இலக்கை அடைய களமிறங்கிய சென்னை அணி மிகச்சிறப்பாக தங்களது பேட்டிங்கை வெளிப்படுத்தியது. இதனால் 18.2 ஓவர்களில் 145 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
சென்னை அணியில் 3 விக்கெட்டுகளை எடுத்து சிறப்பாக பந்து வீசிய சிமர்ஜித் சிங் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டி முடிந்த பிறகு சென்னை அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் வெற்றியின் காரணத்தை பற்றி பேசி இருந்தார். அவர் பேசுகையில், “இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பவர் பிளேவில் நாங்கள் அடித்து விளையாடினோம் ஆனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினோம்
இருந்தாலும் எங்களது அணியின் பேட்டிங்கை நம்பி எந்த ஒரு அழுத்தமும் இன்றி போட்டியில் தொடர்ந்து விளையாடினோம். மேலும், சேப்பாக்கம் மைதானத்தில் பந்து வீச்சாளர்களுக்கு ஒரு பெரிய பங்கு எப்போதுமே இருக்கும். அதை பயன்படுத்தி எங்கள் அணியின் பவுலர்களும் இன்றைய போட்டியில் நன்றாக பந்து வீசினார்கள்.
மேலும், ஒரு கேப்டனாக ஒரு முனையில் பொறுப்பெடுத்து விளையாட வேண்டும் என்று நினைத்து தான் வந்தேன் அதையும் நான் சிறப்பாக செய்தேன் என்று நம்புகிறேன். இந்த வெற்றியின் மூலம் எங்களது பவர் பிளே வாய்ப்பும் நீடித்துள்ளது”, என்று போட்டி முடிந்த பிறகு சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்வாட் பேசி இருந்தார்.