கொஞ்சம் வெறுப்பா இருக்கு! தோல்வியை தொடர்ந்து வேதனையாக பேசிய பும்ரா!
தொடரை இழந்தது ஏமாற்றமாக இருந்தாலும், சிறப்பான போட்டியை அளித்த ஆஸ்திரேலிய அணிக்கு எனது வாழ்த்துகள் ஜஸ்ப்ரித் பும்ரா தெரிவித்துள்ளார்.
சிட்னி : பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்ரேலியா கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்ததன் மூலம் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இந்திய இழந்துள்ளது.
டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்தது பற்றி 5-வது போட்டி முடிந்த பிறகு பேசிய கேப்டன் பும்ரா ” நாங்கள் இந்த தொடரில் எங்களால் முடிந்த அளவுக்கு போராடினோம். ஆனால், வெற்றிபெறமுடியவில்லை என்பது வருத்தமாக தான் இருக்கிறது. தோல்வியை ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும். சரியான உடல் நிலை அந்த நேரத்தில் அமையவில்லை என்றால் நாம் அதற்கு மதிப்பளித்து தான் ஆகவேண்டும்.
இதுபோன்ற பிட்சில் பந்துவீச எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், என்னால் தொடர்ச்சியாக விளையாட முடியாமல் நடுவில் சென்றது கொஞ்சம் வெறுப்பாக இருக்கிறது. மருத்துவமனைக்கு நான் சென்றுவிட்டு திரும்ப இங்கு பந்துவீசலாம் என்று முடிவு செய்துதான் உடற்தகுதி நிபுணர்களுடன் பேசினேன் ஆனால், அவர்கள் வேண்டாம் என்னை அறிவுறுத்தினார்கள்.
எனவே, அவர்களுடைய அறிவுரையின் படி நான் கேட்டுக்கொண்டு பந்துவீசவில்லை. இந்த டெஸ்ட் தொடர் மிகவும் சவாலாக இருந்தது. இதில் இருந்து நாங்கள் சில விஷயங்களையும் கற்றுக்கொண்டோம். போட்டியில் தோல்வி அடைந்தது ஒரு பக்கம் வேதனையாக இருந்தாலும் மற்றோரு பக்கம் அணிக்குள் இளம் வீரர்கள் வந்திருப்பதை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் விளையாட எளிதான இடம் அல்ல, ஆனால் எங்கள் குழுவில் நிறைய திறமைகள் இருப்பதை நாங்கள் காட்டியுள்ளோம். எங்களுக்கு எதிராக விளையாடிய ஆஸ்ரேலியா அணியும் சிறப்பாக விளையாடினார்கள். நாங்கள் அவர்களுக்கு இந்த நேரத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். ” எனவும் பும்ரா கூறினார்.