தமிழ் தவிர எதுவும் தெரியாது …ரொம்ப கஷ்ட பட்டேன் – கிரிக்கெட் வீரர் நடராஜன் பேட்டி
நடராஜன் : இந்திய அணியின் பவுலரான நடராஜன் சமீபத்தில் தான் சேலத்தில் படித்த கல்லூரியில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்ற போது மாணவர்களுக்கு உரையாற்றி உள்ளார்.
இந்திய அணியின் இடது கை பவுலரும், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரருமான நடராஜன் சமீபத்தில் சேலத்தில் உள்ள அவர் படித்த ஏவிஎஸ் கல்லூரியில் அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினார்கள். அந்த விழாவில் கலந்து கொண்ட நடராஜன் அங்கு மாணவர்கள் முன் உரையாற்றினார். மேலும், அந்த உரையில் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு பல அட்வைஸ்களை கொடுத்துள்ளார்.
அவர் பேசிய போது, “மாணவர்களே முதலில் உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். நம்மால் இதை செய்ய முடியும் என்று நினைத்து முயற்சி செய்யுங்கள் நிச்சயம் அது உங்களால் முடியும். சாதாரண ஒரு கிராமத்தில் பிறந்து இன்று நான் இந்த அளவிற்கு வந்திருக்கிறேன் என்றால் அது என்னுடைய தன்னம்பிக்கையும், உழைப்பும் தான் காரணம்.
அதே போல நீங்கள் பெரிய அளவுக்கு உயர்ந்து விட்டாலும் நீங்கள் கடந்து வந்த பாதையை ஒருபோதும் மறந்து விடக்கூடாது. நான் இப்பொது வரை நன்றி மறவாமல் இருப்பதால் தான் உங்களை போல இவ்வளவு நல்ல உள்ளங்களை சம்பாதித்து இருக்கின்றேன். என் உடை மாறலாம் அதற்கு முக்கிய காரணம் நான் செல்லும் இடங்களுக்கு ஏற்ப நான் உடையை அணிந்து கொள்வேன்.
இருப்பினும் நான் என்றுமே பழைய விஷயங்களை மறக்க மாட்டேன். நீங்களும் இந்த நல்ல குணத்தை கல்லூரி படிக்கும் போதே மனதிற்குள் விதைத்துக் கொள்ளுங்கள். அதே போல ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு முதன் முதலில் நான் விளையாடிய போது ஹிந்தி தெரியாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். எனக்கு ஹிந்தி தெரியாததால் நான் அந்த இடத்தில் தனிமையை உணர்ந்தேன். மேலும், சொல்ல போனால் எனக்கு தமிழை தவிர வேறு எந்த மொழியும் தெரியாது.
பஞ்சாப் அணியில் இருந்த ஸ்ரீதர் என்ற பயிற்சியாளர் மட்டும் தான் என்னுடன் தமிழில் பேசி எனக்கு அப்போது உதவினார். மேலும், சேவாக்கும் எனக்கு துணையாக இருந்தார். இந்தி தெரியவில்லை என்பதால் நான் அங்கு சோர்ந்து போகவில்லை. எனவே மாணவர்களே இந்த பருவத்திலேயே பல மொழிகளை கற்றுக் கொள்ளுங்கள்”, என்று நடராஜன் மாணவர்களுக்கு கூறினார்.