IND vs BAN : ‘தோனி சொன்னதை செய்தேன்…’ அதிரடிக்கு பின் ரிங்கு சிங் கொடுத்த பேட்டி!
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நேற்று நடந்த டி20 போட்டியில் அதிரடி வீரரான ரிங்கு சிங் அரை சதம் அடித்து அவுட்டாகி இருந்தார்.
டெல்லி : நடைபெற்று வரும் இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான சுற்றுப் பயணத்தின் டி20 தொடரில் நேற்று இரண்டாவது போட்டியானது நடைபெற்றது. இந்தப் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் வங்கதேச அணி பவுலிங் தேர்வு தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் களமிறங்கிய இந்திய அணி முதலில் சற்று ரன்களை சேர்த்தாலும் 41 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது இளம் வீரரும், இடது கை அதிரடி பேட்ஸ்மானுமான ரிங்கு சிங் களமிறங்கினார். சரியான நேரத்தில் களமிறங்கிய அவர் மைதானத்தில் அமர்ந்திருந்த ரசிகர்களுக்கு வாணவேடிக்கை காட்டினார்.
அவருடன் மற்றும் ஒரு இளம் அதிரடி வீரரான நிதிஷ் ரெட்டியும், தனது பங்கிற்கு சிக்ஸர் மழைகளை பொழிந்தார். அதிலும் ரிங்கு சிங் வேகமாக அவரது அரை சதத்தை பூர்த்தி செய்தார். அவர், 29 பந்துக்கு 59 ரன்கள் குவித்திருந்தார். அதில், 5 ஃபோர்களும், 3 சிக்ஸர்களும் அடங்கும்.
இந்த போட்டி முடிந்த பிறகு ரிங்கு சிங் பேட்டி அளித்திருந்தார். அதில், இந்த போட்டியில் விளையாடிய அனுபவம் குறித்து பகிர்ந்திருந்தார். இது குறித்து ரிங்கு சிங் பேசுகையில், “கடினமான நேரங்களில் அமைதியாக இருக்க வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டதே இந்த அதிரடி விளையாட்டின் காரணமாகும்.
இங்கு நான் நீண்ட காலமாக விளையாடி வருவதால் அது எனக்கு இயற்கையாகவே வரக்கூடிய ஒன்றாகும். சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் நான் பயிற்சி செய்து வருகிறேன். இது பற்றி நான் தோனி பாயிடம் நிறைய பேசியிருக்கிறேன். அதுதான் இந்த போட்டியில் எனக்கு உதவியது. ஆரம்பத்திலேயே 3–4 விட்கெட்டுகள் விழுந்துவிட்டால் நீங்கள் தன்னம்பிக்கையுடன் விளையாட வேண்டும்.
பிட்ச் கொஞ்சம் மெதுவாக இருந்தது இதனால், நிதிஷ் ரெட்டியும் நானும் பார்ட்னர்ஷிப் அமைக்க முயற்சித்தோம். முகமதுல்லா வீசிய நோபாலுக்கு பின் போட்டி முற்றிலும் எங்கள் பக்கம் திரும்பியது. அந்தப் பந்துக்குப் பின் நித்திஷ் ரெட்டி தன்னம்பிக்கையைப் பெற்று அதிரடியாக விளையாடினார்”, என்று ரிங்கு சிங் பேசி இருந்தார்.
மேலும், நேற்று நடைபெற்ற அந்த போட்டியில் பேட்டிங் மட்டுமின்றி பவுலிங்கிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. இதன் காரணமாக இந்திய அணி நேற்றைய போட்டியில் 86 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்ததுடன் தொடரையும் 2-0 என கைப்பற்றியது.