‘எனக்கு வயதாகிவிட்டது… ஃப்ரான்சைஸ் லீக்கை கையாள முடியாது’ – சேவாக் ஓபன் டாக்.!
எனக்கு விளையாட வயதாகிவிட்டது, இப்போது பிரான்சைஸ் லீக்குகளில் வேகப்பந்து வீச்சை கையாள முடியாது என்று வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.
![Virender Sehwag](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Virender-Sehwag.webp)
டெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 2011 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் முக்கிய அங்கம் வகித்த அவர், பெரும்பாலான போட்டிகளில் முதல் பந்தில் பவுண்டரி அடித்து, டேல் ஸ்டெய்ன், ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களை திக்குமுக்காட செய்வார்.
தற்போது நடைபெற்று வரும் DP வேர்ல்ட் இன்டர்நேஷனல் லீக் T20 (ILT20) தொடருக்கான நட்சத்திர வர்ணனையாளர் குழுவில் கலந்து கொண்ட சேவாக், நேற்றைய தினம் சில முக்கிய விஷயங்கள் குறித்து தனியார் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். தனது சுறுசுறுப்பான ஆட்ட நாட்களில் இருந்த தொடர்பை தான் இழந்துவிட்டதால், ஃபிரான்சைஸ் லீக்குகளில் வீரராக இடம்பெறாமல் போகலாம் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்,”ஃபிரான்சைஸ் லீக்குகளில் சர்வதேச கிரிக்கெட் அல்லது ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய வீரர்கள் யாராவது விளையாட விரும்பினால், இந்தப் போட்டி அவர்களுக்கு ஒரு சிறந்த தளமாகும். உத்தரணமாக, தினேஷ் கார்த்திக் SA20 சென்று அங்கு பங்கேற்றது போல, யாராவது முன் வர வேண்டும்.
அதேபோல், சில இந்திய வீரர்கள் DP World ILT20 இல் பங்கேற்பதை நாங்கள் பார்க்க விரும்புகிறோம். யுவராஜ் சிங் இந்தப் போட்டியில் விளையாடுவதைப் பார்க்க நான் விரும்புகிறேன். அவர் சிக்ஸர்களின் ராஜா, ஆனால் என்னால் முடியாது, இப்போது விளையாட எனக்கு வயதாகிவிட்டது. இப்போது வேகப்பந்து வீச்சை என்னால் கையாள முடியாது,” என்று 46 வயதான சேவாக் கூறினார்.
“ஒரு லீக்கை இன்னொரு லீக்குடன் ஒப்பிட முடியாது, ஏனென்றால் லீக்குகள் வெவ்வேறு நாடுகளுக்கு நடக்கின்றன. அது அந்தந்த நாடுகளுக்கும் நல்லது. ஐபிஎல் இந்தியாவிற்கு நல்லது. பிபிஎல் ஆஸ்திரேலியாவிற்கு நல்லது. அதேபோல், ஐஎல்டி20 யுஏஇ வீரர்களுக்கும், யுஏஇ, மத்திய கிழக்கு நாடுகளுக்கும் நல்லது.
எனவே ஒரு லீக்கைத் தேர்ந்தெடுப்பது கடினம். ஆனால் நல்ல விஷயம் என்னவென்றால், 9 சர்வதேச வீரர்கள் ஒரே அணியில் விளையாடுவதை நீங்கள் பார்க்க முடியாது. அது டிபி வேர்ல்ட் ஐஎல்டி20 இல் மட்டுமே நடக்கிறது,” என்று கூறியிருக்கிறார்.