பிறந்த குழந்தையை பார்ப்பதைவிட நாட்டுக்காக விளையாடியது பெருமைகொள்கிறேன் – நடராஜன்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் அசத்திய தமிழக வீரர் நடராஜன் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
சேலம் சின்னப்பன்பட்டியை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, நிபுணர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த நடராஜன், ஐபிஎல் போட்டியில் விளையாடிய அனுபவம் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக செயல்பட உதவியாக இருந்தது. ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. முதல் ஒருநாள் போட்டியில் விக்கெட் எடுத்தது கனவு போல் இருந்தது.
ஆஸ்திரேலியாவில் திடீரென கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள நினைத்தேன். இந்திய அணியின் சக வீரர்கள், பயிற்சியாளர் உள்ளிட்டோர் ஆதரவளித்தார்கள் மற்றும் உறுதுணையாக இருந்தனர். ஆஸ்திரேலிய அணி வீரர் டேவிட் வார்னர் என்னை முழுமையாக ஆதரித்தார், பாராட்டினார். வெற்றி கோப்பையை கையில் ஏந்திய தருணம் மகிழ்ச்சியாக இருந்தது. விராட் கோலி கோப்பையை கொடுத்தபோது கண்கலங்கினேன்.
கடினமாக உழைத்தால் பலன் கண்டிப்பாக கிடைக்கும். அதற்கு நானே சாட்சி. கடின உழைப்பு ஒருவரை நிச்சியம் உயரத்துக்கு கொண்டு செல்லும். வெற்றி பெற என்ன முடியுமோ அதை நான் செய்தேன். எனக்கு ஆதரவளித்த தமிழ் மக்களுக்கு நன்றி. என்னை அவர்களின் வீடு மகனாக பார்க்கிறார்கள். சேலத்தில் இருந்து வரும் காலங்களில் பல வீரர்கள் வருவார்கள். பிறந்த குழந்தையை பார்ப்பதைவிட நாட்டுக்காக விளையாடியதை பெருமையாக கருதுகிறேன் என தெரிவித்துள்ளார்.