‘நானும் சிறந்த ஸ்பின்னர் தான் ‘! டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு கேட்கும் தமிழக வீரர்!
சென்னை : சர்வேதச டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாட வாய்ப்பளிக்க வேண்டும் என சாய் கிஷோர் ஒரு பேட்டியில் கூறி உள்ளார்.
இந்தியாவின் இளம் வீரரும், ஆல் ரவுண்டரான சாய் கிஷோர் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். டி20 போட்டிகளில் பவர்பிளே, மிடில் ஓவர்ஸ் மற்றும் டெத் ஓவர்களில் கூட சிறப்பாகப் பந்து வீசி குஜராத் அணியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகிறார். ஒரு சிறந்த சுழற் பந்து வீச்சைத் தாண்டி, பேட்டிங்கிலும் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டால் தனது நங்குர ஆட்டத்தால் அணிக்குப் பக்கபலமாக பேட்டிங்கிலும் திகழ்ந்துள்ளார்.
ஐபிஎல் தொடர்களையும் தாண்டி உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பையிலும் தமிழ்நாடு அணிக்காகச் சிறப்பாக விளையாடியும் இருக்கிறார். கடந்த 2023-2024 ஆண்டிற்கான ரஞ்சி ட்ராபி தொடரில் சிறப்பாக விளையாடி தமிழக அணியை அரை இறுதி வரை கொண்டு சென்றார். அந்த தொடரில் மட்டும் சாய் கிஷோர் 9 போட்டிகளில் விளையாடி, 2.55 எக்னாமியில் 53 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அவர் அடுத்ததாக வரும் செப்-5ம் தேதி தொடங்கவுள்ள துலீப் ட்ராபி தொடரில் டீம்- B அணிக்காக விளையாட இருக்கிறார்.
இந்த நிலையில் அவர் நேற்று தனியார் பத்திரிகைக்குப் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பளிக்க வேண்டுமெனத் தேர்வாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “இந்தியாவில் உள்ள சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் நானும் ஒருவன் என்று நான் நினைக்கிறேன். என்னை சர்வேதச டெஸ்ட் போட்டியில் எடுங்கள்,
நான் இந்திய அணிக்காக விளையாடத் தயாராக இருக்கிறேன். அதிக போட்டிகளில் நான் கவனிக்கப்படாமல் இருக்கிறேன். ஜடேஜா போன்ற ஒரு வீரருடன் இணைந்து நானும் விளையாட விரும்புகிறேன். நான் அவருடன் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து இருக்கிறேன். ஆனால் ரெட்-பால் (டெஸ்ட் போட்டிகளில்) வடிவத்தில் அவருடன் ஒன்றாக விளையாடியதில்லை.
எனவே, களத்தில் அவர் என்ன ட்ரிக்ஸ் செய்கிறார் என்பதை நேரடியாகப் பார்க்க நல்ல அனுபவமாக இருக்கும். அவரிடம் அதிக கற்றுக் கொள்ள ஒரு சந்தர்ப்பமாக அமையும். நான் ஒரு சிறந்த பவுலர் என்று சொல்வதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எனவே, முன்பைவிட நான் என் திறமையை வெளிக்காட்டத் தயாராக இருக்கிறேன்”, என்று சாய் கிஷோர் அந்த பேட்டியில் கூறி இருந்தார்.
சமீபத்தில் நடைபெறப் போகும் இந்த துலீப் ட்ராபி தொடருக்காக பிசிசிஐ அணியை அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதில், இந்த துலீப் ட்ராபியில் சிறப்பாக விளையாடும் வீரர்களே வங்கதேச தொடருக்கு விளையாடுவார்கள் எனக் குறிப்பிட்டிருந்தனர். இதனால் தமிழக கிரிக்கெட் ரசிகர்கள், துலீப் ட்ராபியில் சாய் கிஷோரைச் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர். இதன் மூலம் அவருக்கு வங்கதேச தொடரில் விளையாடுவதற்கு வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.