ஜஸ்ட் மிஸ்.., IPL சம்பவத்தை தவறவிட்ட ஹைதிராபாத் அணி! இனி என்ன நடக்க போகுதோ?
ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 286 ரன்கள் அடித்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோரை ஹைதிராபாத் அணி படைத்துள்ளது.

ஹைதிராபாத் : இன்று ஐபிஎல் 2025 தொடரின் 2வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் விளையாடி வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதிராபாத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் குவித்தது.
20 ஓவரில் 286 ரன்கள் என்பது IPL வரலாற்றில் 2வது அதிகபட்ச ரன் ஆகும். ஆனால், ஒரு ரன் வித்தியாசத்தில் தங்களது சொந்த சாதனையான 20 ஓவரில் 287 என்ற முதலிடத்தை தவறவிட்டது ஹைதிராபாத் அணி.
இன்றைய போட்டியில் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா 24 ரன்களில் அவுட் ஆக, டிராவிஸ் ஹெட் தனது வழக்கமான அதிரடி பாணியில் 31 பந்துகளில் 67 ரன்கள் விளாசினார். ஹைதிராபாத் வீரர் இஷான் கிஷன் 47 பந்துகளில் 11 பவுண்டரி, 6 சிக்ஸர் விளாசி தனது முதல் IPL சதத்தை பதிவு செய்தார். இஷான் கிஷான் 106 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஐபிஎல் வரலாற்றில் SRH-ன் ஆதிக்கம் :
ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த அணிகளின் பட்டியலில் முதல் மூன்று இடங்களையுமே சன்ரைசர்ஸ் ஹைதிராபாத் அணி பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணிக்கு எதிராக பெங்களூரு மைதானத்திலேயே 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் விளாசி இருந்தது சன்ரைசர்ஸ் ஹைதிராபாத் அணி.
- இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஹைதிராபாத் மைதானத்தில் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்துள்ளது.
- கடந்த சீசனில் மும்பை அணிக்கு எதிராக ஹைதிராபாத் மைதானத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்துள்ளது ஹைதராபாத் அணி.
கடந்த 2024 சீசனில் 287 ரன்கள் என்ற இமாலய சாதனையை பதிவு செய்த ஹைதிராபாத், இன்று ஒரு ரன் வித்தியாசத்தில் அதை முறியடிக்க முடியாமல் போனது. 287 ரன்கள் என்ற அவர்களது முந்தைய சாதனையின் போது டிராவிஸ் ஹெட் 102 ரன்களும், ஹென்ரிச் கிளாசென் 67 ரன்களும், விளாசி இருந்தனர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடர்ந்து தனது பேட்டிங் பலத்தை கடந்த ஆண்டில் இருந்து நிரூபித்து வருகிறது. 2024 சீசனில் தொடங்கி இடையில் தான் அதிகபட்ச ஸ்கோரை எட்டியது. ஆனால், தற்போது முதல் ஆட்டத்திலேயே அதனை செய்துகாட்டி, ஹைதிராபாத் அணிக்கு எதிராக அடுத்தடுத்த போட்டிகளை எதிர்கொள்ளும் அணிகளுக்கு சற்று பதட்டத்தை உறுதி செய்துள்ளது. அவர்களது அதிரடி பயணம், 2025 சீசனின் முதல் போட்டியில் இருந்தே தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளை எதிர்பார்க்க வைத்துள்ளது.