பஞ்சாப்பை சல்லி சல்லியாக நொறுக்கிய அபிஷேக் சர்மா! ஹைதராபாத் மிரட்டல் வெற்றி!
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும் நாங்கள் திரும்பி வந்துவிட்டோம் அதுவும் பயங்கரமான பார்மில் திரும்ப வந்திருக்கிறோம் என்பது போல இன்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஹைதராபாத் விளையாடி காண்பித்துள்ளது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற உடனடியாகவே நாங்கள் பேட்டிங் செய்யப்போகிறோம் என பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிரடியாக தேர்வு செய்தது மட்டுமின்றி பஞ்சாப் பட்டையை கிளப்பும் படி ஆடியது.
20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்ததாக அதிரடியான பேட்டிங் லைன் அப் வைத்திருக்கும் ஹைதராபாத் களமிறங்கியது. களமிறங்கியவுடன் ஆரம்பமே அதிரடி மட்டும் தான் என்பது போல ஒரு பக்கம் டிராவிஸ் ஹெட் பவுண்டரி விளாசி அதிரடி காட்ட மற்றொரு பக்கம் அபிஷேக் சர்மா சிக்ஸர் மூலம் அதிரடி காட்டி பஞ்சாப் அணி பந்துவீச்சாளர்களை மன வேதனையில் ஆழ்த்தினார்கள்.
12 ஓவர்கள் வரை இருவரும் விக்கெட் விடாமல் சிக்ஸர் பவுண்டரி என மாறி மாறி வெளுத்து வாங்கிக்கொண்டு இருந்தார்கள். 12.-வது ஓவரின் 2-வது பந்தை எதிர்கொண்ட ஹெட் சிக்ஸர் விளாச நினைத்து 66 ரன்கள் விளாசி ஆட்டமிழந்து வெளியேறினார். ஆனால், ஒரு புயலை தான் நீங்கள் சமாளித்தீர்கள் இன்னொரு புயல் ஓயவில்லை என்பது போல அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடிக்கொண்டு இருந்தார்.
அதிரடியாக விளையாடி 11 பவுண்டரிகள் 6 சிக்ஸர் என 40 பந்துகளில் 100 விளாசினார். இவர் இந்த அளவுக்கு அதிரடியாக விளையாடிய காரணத்தால் தான் 41 பந்துகளில் வெற்றிபெற 70 ரன்கள் வந்தது. சதம் விளாசியதை தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த அபிஷேக் மீண்டும் சிக்ஸர் பவுண்டரி என தெறிக்கவிட்டார்.
இதன் காரணமாக, கடைசியாக 5 ஓவர்களில் ஹைதராபாத் அணிக்கு 41 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அப்படி இருந்துமே நான் அதிரடியாக விளையாடி முடித்துக்கொடுப்பேன் என ஒரே ஆளாக களத்தில் நின்று விளையாடினார். ஆனால் கடைசி நேரத்தில் அவரும் 141 ரன்களுக்கு அவுட் ஆகி பெவிலியன் சென்றார்.
3 ஓவரில் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களத்தில் இஷான் கிஷன், ஹென்ரிச் கிளாசென் களத்தில் நின்றுகொண்டு இருந்தார்கள். இருவரும் நின்ற காரணத்தால் வெற்றி ஹைதராபாத் பக்கம் தான் இருந்தது. அவர்களும் சிறப்பாக விளையாடி கொடுத்து அணியை வெற்றிபெற வைத்தனர்.
இறுதியாக ஹைதராபாத் அணி 18.3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஏற்கனவே, இந்த சீசனில் இதற்கு முன்னதாக 5 போட்டிகள் ஹைதராபாத் அணி விளையாடியிருந்த நிலையில், முதல் போட்டியில் மட்டும் தான் வெற்றிபெற்றிருந்தது. அதற்கு பிறகு தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியை தழுவிய நிலையில் இந்த போட்டியில் வெறித்தனமாக வெற்றிபெற்று கம்பேக் கொடுத்துள்ளது.