ஆண்ட்ரே ரஸ்ஸலை எப்படி யூஸ் பண்றீங்க? டென்ஷனாகி கேள்வி எழுப்பிய அனில் கும்ப்ளே!
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில் மோதியது. முதலில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்ததது.
20 ஓவரில் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் குஜராத் அணியினரின் பந்துவீச்சில் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதனால், சொந்த மண்ணில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 39 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்ந்தது.
இந்த தோல்வியின் மூலம் கொல்கத்தா அணி புள்ளி விவரப்பட்டியலில் 7-வது இடத்திற்கு சென்றது. இந்த நிலையில் கொல்கத்தா அணி தோல்விக்கான காரணங்கள் குறித்தும் வீரர்கள் சரியாக பயன்படுத்தப்படவில்லை என்கிற விமர்சனங்களும் எழுந்துள்ளது. இந்த சூழலில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஆண்ட்ரே ரஸ்ஸலை அணி ஒழுங்காக பயன்படுத்தவில்லை என விமர்சனம் செய்து பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” ஆண்ட்ரே ரஸ்ஸலை டக்அவுட்டில் வைத்திருக்க முடியாது. அதே சமயம், அவர் அணியில் இடம்பெற்று ஒரு சில பந்துகளை கொடுத்து ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் நிச்சயமாக முடியாது. என்னைப்பொறுத்தவரை கேகேஆர் அவரை சரியாகப் பயன்படுத்தவில்லை என்று தான் சொல்வேன். அவர்கள் அவரை டெத் ஓவர்களுக்கு வைத்திருக்க விரும்புகிறார்கள் என்பது எனக்குப் புரிகிறது, ஆனால் போட்டி ஏற்கனவே கைவிட்டு போனது என்கிற சூழ்நிலை வரும் போது அவரை அமர வைத்து தாமதமாக இறக்குவது எதற்கு?
அப்படி செய்வதில் என்ன பலன் அணிக்கு கிடைக்கிறது என்று உண்மையில் எனக்கு தெரியவில்லை. கடந்த ஆண்டு வென்ற அணியில் இல்லாத முக்கிய வீரர்கள் ஷ்ரேயாஸ் ஐயர், மிட்செல் ஸ்டார்க் மற்றும் பில் சால்ட் இல்லாதது ஒரு பின்னடைவாக இருந்தாலும், நீக்கப்படாத வெங்கடேஷ் ஐயரின் பார்மும் ஒரு பிரச்சினையாக இருக்கிறது” எனவும் அனில் கும்ப்ளே வெளிப்படையாகவே விமர்சனம் செய்து பேசினார். மேலும், இந்த சீசன் 6 போட்டியில் விளையாடியுள்ள ஆண்ட்ரே ரஸ்ஸல் 55 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.