ஐசிசி தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து முதலிடம் பிடித்து சாதனை.!
நியூசிலாந்து அணி ஐசிசி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் 118 ரேட்டிங் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.
நியூசிலாந்து – பாகிஸ்தான் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. பே ஓவலில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. கேப்டன் கேன் வில்லியம்சன், ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றார். இந்த வெற்றியால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் 117 மதிப்பீடுகளுடன் நியூசிலாந்து முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆனால், இதனை உறுதி செய்ய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என கூறப்பட்டது.
இதையடுத்து, பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் 3-ஆம் தேதி தொடங்கியது. இதில், முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து, பாகிஸ்தான் 297 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 2-வது நாள் ஆட்டம் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்து இருந்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் 112 ரன்னுடனும், ஹென்றி நிகோல்ஸ் 89 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 3-வது நாளான ஆட்டத்தில் 7-வது சதத்தை எட்டிய நிகோல்ஸ் 157 ரன்களில் வெளியேறினார்.
மறுமுனையில் சிறப்பாக விளையாடிய வில்லியம்சன் 4-வது இரட்டை சதத்தை அடித்தார். பின்னர் வில்லியம்சன் 238 ரன்களில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 158.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 659 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இந்த மைதானத்தில் ஒரு அணி 600 ரன்களை கடந்தது இதுவே முதல் நிகழ்வாகும். இதனைத்தொடர்ந்து 2வது இன்னிங்சில் களமிறங்கிய பாகிஸ்தான் 186 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. நியூசிலாந்து அணி 176 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. கேன் வில்லியம்சன் தொடர் ஆட்டநாயகன் விருதை கைப்பற்றினார்.
இந்நிலையில், இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து அணி ஐசிசி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் 118 ரேட்டிங் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. தரவரிசை வரலாற்றில் முதல்முறையாக நியூசிலாந்து அணி இந்த சாதனையை படைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணி 116 ரேட்டிங் பெற்று இரண்டாவது இடத்திலும், இந்தியா 114 ரேட்டிங் பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளது. இதனை ஐசிசி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
???????? NEW ZEALAND ARE NO.1️⃣????
Victory over Pakistan has sent Kane Williamson’s side to the ???? of the @MRFWorldwide ICC Test Team Rankings!
They have achieved the feat for the first time in rankings history ???? pic.twitter.com/8lKm6HebtO
— ICC (@ICC) January 6, 2021