‘வரலாற்று சாதனை’:மகளிர் உலகக் கோப்பையில் பாக்.வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த வங்கதேச அணி!

Default Image

மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி தொடரில் வங்கதேசம் அணியானது பாகிஸ்தானை ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

ஹாமில்டனில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி,ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.இதனால்,முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய வங்கதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக,ஃபர்கனா 71 ரன்கள் எடுத்தார்.மேலும்,அணியின் கேப்டன் நிகர் சுல்தானா 46 ரன்கள் எடுத்துள்ளார்.பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை அதிகபட்சமாக நஷ்ரா சந்து 3 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

இதனையடுத்து,235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீராங்கனைகளாக நஹிதா கான்,சிட்ரா அமீன் களமிறங்கி அதிரடி காட்டினர்.எனினும், நஹிதா 43 ரன்களில் ஆட்டமிழக்க,சிட்ரா 8 பவுண்டரிகள் அடித்து வெளுத்து வாங்கினார்.இதனையடுத்து,104 ரன்களில் அவர் ரன் அவுட் ஆனார்.

இதனையடுத்து,இறங்கிய வீராங்கனைகளும் அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க,இறுதியில் பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால் 9 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான்,வங்கதேச அணியிடம் அதிர்ச்சி தோல்வியை தழுவியது.வங்கதேச அணியைப் பொறுத்தவரை அதிகபட்சமாக  ஃபஹிமா கதுன் 3 விக்கெட்டுகளும், ருமானா அகமது இரு விக்கெட்டுளையும் எடுத்துள்ளனர்.

பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதன் மூலம் ,உலகக் கோப்பை தொடரில் வங்கதேச அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இதன்மூலம்,பாகிஸ்தான் அணி கடந்த 18 உலகக் கோப்பை ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ள நிலையில்,ஆடவர்,மகளிர் உலகக் கோப்பைப் போட்டிகளில் 18 தொடர் தோல்விகளை எதிர்கொண்ட ஜிம்பாப்வே அணியுடன் பாகிஸ்தான் இணைந்துள்ளது.ஏனெனில்,1983 முதல் 1992 வரை ஜிம்பாப்வே அணி, உலகக் கோப்பைப் போட்டிகளில் 18 முறை தோல்விகளை தழுவியது என்பது  குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்