போட்டிக்கு முன் 2017 வெற்றியை நினைவு கூர்ந்த பாகிஸ்தான் வீரர்.! அப்படி என்ன சொன்னார்?
பாகிஸ்தான் நட்சத்திர வீரர் பாபர் அசாம், 2017-ல் நடந்த சாம்பியன்ஸ் டிராபி நினைவுகளை நினைவு கூர்ந்து பேசியிருக்கிறார்.

கராச்சி : நியூசிலாந்துக்கு எதிரான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக, பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம், கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவை வீழ்த்தி, வெற்றி பெற்றது குறித்து நினைவு கூர்ந்தார். 2025 சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க ஆட்டம் இன்னும் சில மணிநேரங்களில் தொடங்க உள்ளது. முதலில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி கராச்சியில் உள்ள தேசிய மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் பாபர் அசாம், போட்டியில் விளையாடுவது குறித்து பாபர் தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார், மேலும் 2017 போட்டியின் நினைவுகள் பற்றியும் நினைவு கூர்ந்துள்ளார். அதாவது கடந்த 2017ல் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் கடைசி போட்டியில் பாகிஸ்தான் தனது பரம எதிரியான இந்தியாவை வீழ்த்தி முதல் சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வென்றது. அந்த இறுதிப் போட்டியில், பாபர் வெறும் 52 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
போட்டிக்கு முன் பேட்டியளித்த பாபர் அசாம், ” ஒரு வீரராக, நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன், மேலும் அனைத்து ரசிகர்களும் உற்சாகமாக உள்ளனர். 2017 இறுதிப் போட்டியின் எனது முதன்மை நினைவுகள் ஃபகார் ஜமானின் இன்னிங்ஸ் (114), முகமது அமீரின் ஸ்பெல், ஹசன் அலியின் ஸ்பெல் மற்றும் வெற்றி தருணம். எனக்கு, இது ஒரு புதிய பயணம், ஏனெனில் நான் அப்பொழுது ஒரு இளம் வீரராக இருந்தேன்.
இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது, அந்த உற்சாகமும் பதட்டமும் இருந்தது. ஆனால் நாங்கள் வெற்றி பெற்றபோது, நாங்கள் அதை அனுபவித்து கொண்டாடினோம். 2017 இல் சாம்பியன்ஸ் டிராபி நடத்தப்பட்டதிலிருந்து நிறைய மாறிவிட்டது. எங்களிடம் புதிய வீரர்கள் வருகிறார்கள், அந்த வென்ற அணியில் மூன்று அல்லது நான்கு வீரர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால் நம்பிக்கை அப்படியே உள்ளது” என்று கூறியுள்ளார்.