INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!
இந்த நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சதம் விளாசி சாதனைப் படைத்துள்ளார்.
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது. இந்த முதல் நாளில் இந்திய அணியின் நம்பிகையாக இருந்த பேட்ஸ்மேன்கள் சொதப்பினார்கள். இதனால், ஒரு கட்டத்தில் இந்திய அணி ரன்களை சேர்க்க போட்டியில் தடுமாறியது.
இந்த நிலையில், அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் கூட்டணி இந்திய அணிக்கு இன்றைய நாளில் வலு சேர்த்தது. ஜடேஜாவுடன் மிகச் சிறப்பாக விளையாடிய அஸ்வின், சர்வேதச டெஸ்ட் போட்டிகளில் தனது 4-வது சதத்தை பூர்த்தி செய்தார். இந்தப் போட்டியில் அவர் 112 பந்துகளில் 102* ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழக்காமல் களத்தில் உள்ளார்.
இந்த சத்தத்தின் மூலம் 8-வது விக்கெட்டுக்கு களமிறங்கி அதிக முறை சதம் (4 முறை) அடித்தவர்களின் பட்டியலில் டேனியல் வெட்டோரிக்கு (5 முறை) அடுத்த படியாக 2-வது இடத்தில் இருந்து வருகிறார். இந்த போட்டியின் முதல் நாள் முடிவடைந்த நிலையில் சதம் அடித்த அனுபவத்தை குறித்து அஸ்வின் தற்போது பேசி இருக்கிறார்.
அவர் பேசிய போது, “ஹோம் கிரவுண்டில் விளையாடுவது எப்போதுமே ஒரு சிறப்பான உணர்வு தான். நான் கிரிக்கெட் விளையாட அதிகம் விரும்பும் மைதானம் இது தான். இது எனக்கு நிறைய அற்புதமான நினைவுகளை அளித்துள்ளது. நான் இன்று எனது பேட்டிங்கில் சிறிது வேலை அதிகமாக செய்தேன்.
இது கொஞ்சம் பவுன்சர் மற்றும் கேரியுடன் கூடிய சிவப்பு மண் பிட்ச், அதனால் நினைத்த நேரம் சில ஷாட்களை விளையாட அனுமதிக்கிறது. ஜடேஜா உண்மையான எனக்கு உதவியாக இருந்தார். நான் விளையாடும் போது சற்று சோர்வாக இருந்தேன் அந்த சமயம் ஜடேஜா அதனை கவனித்து, ஒன்று, இரண்டு, மூன்று என தட்டி தட்டி ரன்களை சேர்த்து சரியான பாதையில் என்னை வழிநடத்தினார்.
மேலும், கடந்த சில வருடங்களில் இந்திய அணிக்கு கிடைத்த ஒரு சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஜடேஜா ஆவார். அவர் இன்றைய நாளில் களத்தில் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தார்”, என சதம் அடித்த பிறகு முதல் நாளின் முடிவில் அஸ்வின் பேசி இருந்தார்.