அவர் தான் ஒரு பெரிய உதாரணம்! ஆஸ்திரேலியா வீரரை புகழ்ந்த பும்ரா!
ஜஸ்பிரித் பும்ரா : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அகமதாபாத்தில் நடைபெற்ற தனியார் ஊடகம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது பல விஷயங்கள் பற்றி பேசியுள்ளார். அதிலும் குறிப்பாக பந்துவீச்சாளர்களுக்கு பேட்டர்களை விட குறைவான கேப்டன் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது பற்றி பேசினார்.
இது குறித்து பேசிய அவர் ” என்னை பொறுத்தவரை பந்துவீச்சாளர்கள் புத்திசாலிகள் என்று நான் சொல்வேன். எதற்காக அப்படி சொல்கிறேன் என்றால் பேட்ஸ்மேன்களை வெளியேற்ற வேண்டும். அவர்கள் எப்போதும் முரண்பாடுகளை எதிர்த்துப் போராடக்கூடியவர்கள். கேப்டன்சி என்பது ஒரு முக்கியமான வேலை அதுவும் ரொம்ப கடினமாக இருக்கும்.
கேப்டனாக நான் செயல்படும்போதெல்லாம் அந்த வேலையைச் செய்வதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். கேப்டனாக நாம் ஒரு அணியை வழிநடத்தும்போது நமக்கு அது நிறைய விஷயங்களை கற்றுக்கொடுக்கும். அதே சமயம் தைரியத்தை கொடுத்து உங்கள் உடலில் நிறைய அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதைப்போல, பந்து வீச்சாளர்கள் வெற்றிக்கான புதிய வழிகளைக் கண்டுபிடிப்பார்கள், முரண்பாடுகளை எதிர்த்துப் போராடுவது உங்களை மிகவும் தைரியமாக ஆக்குகிறது.
அணியை தலைமை தாங்குவதற்கு பந்துவீச்சாளர்கள் நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும். அதற்கு உதாரணமாக யாரை எடுத்துக்கொள்ளலாம் என்றால் பாட் கம்மின்ஸ் என்று நான் கூறுவேன். ஏனெனில், ஒரு பந்துவீச்சாளராகவும் கேப்டனாகவும் அவர் சிறப்பாக செயல்படுகிறார். அந்த விஷயத்தில் அவர் ஒரு பெரிய உதாரணம், அதிக பொறுப்பை ஏற்கும் வேகப்பந்து வீச்சாளர், மிகுந்த பெருமையை எடுத்துக்கொள்கிறார், உலகக் கோப்பையை வென்றார்” எனவும் பும்ரா தெரிவித்துள்ளார்.
மேலும், தொடர்ந்து பேசிய பும்ரா “நான் கிரிக்கெட் விளையாடவருவதற்கு முன்பு சிறுவயதில் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் கேப்டனாக இருந்ததைப் பார்த்திருக்கிறேன். கபில்தேவ் எங்களுக்கு உலகக் கோப்பையை வென்றார், இம்ரான் கான் பாகிஸ்தானுக்கு உலகக் கோப்பையை வென்றார். எனவே, பந்து வீச்சாளர்கள் புத்திசாலிகள்” எனவும் பும்ரா கூறியுள்ளார்.