கேப்டன் பதவியில் தனக்கு விருப்பம் இல்லை – மிட்செல் மார்ஷ்
ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் தனக்கு விருப்பமில்லை என்று மிட்செல் மார்ஷ் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் ஆரோன் பின்ச் கடந்த மாதம் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்தார். அவர் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்து வந்தார். தற்போது பின்ச் டி-20 போட்டிகளில் மட்டும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருக்கிறார். அவரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக யாரைத் தேர்வு செய்யலாம் என்று ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் கலந்தாலோசித்து வருகிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தனக்கு கேப்டனாக வேண்டும் என்ற விருப்பம் இல்லை எனவும் எனது பேட்டிங்கில் கவனம் செலுத்தப்போகிறேன். மேலும் சொந்த மண்ணில் நடைபெறவுள்ள டி-20 உலகக்கோப்பை தொடரில் முழு கவனத்தையும் செலுத்தப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மார்ஷ், கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் மற்றும் இந்தியாவிற்கு எதிரான டி-20 தொடரிலும் இடம்பெறவில்லை. தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டி-20 தொடரில் விளையாடிவரும் மார்ஷ் முதல் போட்டியில் 26 ரன்கள் குவித்திருந்தார். டி-20 உலகக்கோப்பை தொடரில் அக்-22 ஆம் தேதி ஆஸ்திரேலியா தனது முதல் போட்டியில் நியூசிலாந்தை எதிர்த்து விளையாடுகிறது.