அந்த கேப்டன்சி எண்ணமே அவர்கிட்ட இல்லை! கில்லை கடுமையாக விமர்சித்த சேவாக்!
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணியின் கேப்டன் கில் செய்த தவறுகள் இது தான் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் பேசியிருக்கிறார்.

அகமதாபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிய நிலையில் போட்டியில் பஞ்சாப் அணி கடைசி நேரத்தில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 244 எனும் பெரிய இலக்கை துரத்தி கொண்டு ஓடிய நிலையில், 20 ஓவர்களில் குஜராத் அணியால் 5 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் காரணமாக பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
போட்டியில் குஜராத் அணி தோல்வி அடைந்த நிலையில் குஜராத் கேப்டன் சுப்மன் கில் கேப்டன்சி சரியாக இல்லை என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் விமர்சனம் செய்து பேசியிருக்கிறார். இது குறித்து யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசும்போது ” சுப்மன் கில் பேட்டிங்கில் ஒரு பக்கம் சிறப்பாக இருந்தாலும் அவர் கேப்டன் என்று வரும் போது இன்னும் சில விஷயங்களை கற்றுக்கொள்ளவேண்டும் என்று நான் சொல்வேன். என்னை பொறுத்தவரை அவர் கேப்டனாக இன்னும் தயாராகவில்லையோ என்று அவருடைய கேப்டன்சி பார்த்தால் தோணுகிறது.
கேப்டன் சி செய்யவேண்டும் என்றால் கையில் சில திட்டங்கள் வைத்திருக்கவேண்டும் பதட்டமான சூழ்நிலை வரும் போது அதனை எப்படி எதிர்கொள்ளலாம் என்பதும் இருக்கவேண்டும். அந்த மாதிரி எந்த விஷயமும் கில்லிடம் இல்லை என்று எனக்கு தோணுகிறது. அவருடைய கேப்டன் சியை பார்க்கும்போது சுறு சுறுப்பு என்பது சுத்தமாக இல்லை என்று தோணுகிறது. நான் எதற்காக அவருடைய கேப்டன் சி குறித்து விமர்சித்து பேசுகிறேன் என்றால் முகமது சிராஜ் நன்றாக பந்து வீசியபோது அவர் அர்ஷத் கானை உள்ளே கொண்டு வந்தது மிகப்பெரிய தவறு.
சிராஜ் கடைசியாக அதிக ரன்கள் கொடுத்தாலும் ஆரம்பத்தில் சிறப்பாக தான் பந்துவீசினார். ஆனால், திடீரென நீங்கள் அர்ஷத் கானை கொண்டு வந்து அவருடைய ஓவரில் 21 ரன்கள் கொடுத்த காரணத்தால் தான் டார்கெட் அதிகரிக்க தொடங்கியது. அந்த நேரத்தில் கேப்டனாக கில் செய்தது மிகப்பெரிய தவறு” எனவும் சேவாக் விமர்சனம் செய்து பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர் ” என்னைப்பொறுத்தவரையில் முகமது சிராஜ் நன்றாக பந்து வீசினால், பவர்பிளேயில் அவருக்கு மூன்று அல்லது நான்கு ஓவர்கள் கூட கொடுக்கலாம். அது தான் அவருக்கு விக்கெட் எடுக்க மிகவும் சிறந்த ஓவர்கள் என்று நான் சொல்வேன். இதெல்லாம் புரிந்துகொண்ட கேப்டன் கில் செயல்படவேண்டும்” எனவும் கில்லுக்கு சேவாக் அட்வைஸ் செய்தார்.