GT vs MI : கேப்டன் பாண்டியா என்ட்ரி! இன்னைக்கு என்னெல்லாம் செய்யப் போறாரோ.?
கடந்த ஐபிஎல் சீசனில் ஏற்பட்ட மோசமான அனுபவங்களை தொடர்ந்து இன்று தனது முதல் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அகமதாபாத் : குஜராத் டைட்டன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும் 2022-ல் தொடங்கப்பட்ட உடன் குஜராத் அணிக்கு கேப்டனாக சென்றார் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரராக இருந்த ஹர்திக் பாண்டியா. அந்த வருடம் குஜராத் அணி கோப்பையையும் கைப்பற்றியது. ஆனால் அடுத்து கடந்த சீசனில் பாண்டியா மீண்டும் மும்பை அணிக்கு திரும்பினார்.
ஆனால், கடந்த முறை வருகையில் குஜராத் அணியை வழிநடத்தியது போல கேப்டனாக தான் வருவேன் என கண்டிஷன் விதித்தார் என்றெல்லாம் பேச்சுக்கள் கூறப்பட்டன. நவம்பர் 2023-ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பிய பாண்டியா, 2024 சீசனில் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டார். 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் அணியில் இருக்கும் போதே கேப்டன் பதவி மாற்றப்பட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது.
மும்பையின் மோசமான தோல்விகள் :
அந்த விமர்சனங்களுக்கு கூடுதல் தீனி போடும் வகையில் கடந்த 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் மிக மோசமாக விளையாடியது. 14 போட்டிகளில் விளையாடி வெறும் 4 வெற்றிகள் மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தை (கடைசி) பிடித்து, பிளே-ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாத சூழல் நிலவியது. மேலும், குஜராத் அணியில் இருந்து பாண்டியா சென்றதாலும், மும்பை அணி கேப்டன் பதவி ரோஹித்திடம் இருந்து பறிக்கப்பட்டதாலும் அகமதாபாத், மும்பை மைதானங்களில் ரசிகர்கள் பாண்டியாவை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
குறிப்பாக, MI அணியில் கேப்டனாக அவரது பந்துவீச்சு ஒதுக்கீடு மற்றும் போட்டி உத்திகள் பலராலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. மேலும், பேட்டிங் செய்வதற்கு முன்னர் அவர் மைதானத்தில் உடற்பயிற்சி செய்து மைதானத்திற்குள் சென்று உடனடியாக அவுட் ஆகி வந்ததெயெல்லாம் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு எதிரான எதிர்ப்பு அலை வலுக்க காரணமாக அமைந்தது.
மீண்டு எழுந்த பாண்டியா
ஆனால், அதைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவுக்கு ஒரு மீட்சி கிடைத்தது. 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் துணை கேப்டனாக விளையாடிய அவர், அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்ல முக்கிய பங்காற்றினார். இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கடைசி ஓவரை வீசி, 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். இது அவருக்கு பெரும் பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது. அதன் பின்னர், 2025 சாம்பியன்ஸ் டிராபியிலும் சிறப்பான பங்காற்றினார். இது ஐபிஎல்-ல் அவர் மீதான விமர்சனங்களை அவரது பாணியிலேயே ரிப்ளே கொடுத்திருந்தார்.
பாண்டியாவின் ஐபிஎல் ரிட்டர்ன்ஸ் :
மும்பை அணி கடந்த ஞாயிற்று கிழமை அன்றே சென்னை அணிக்கு எதிராக களம் கண்டிருந்தாலும், கடந்த சீசனில் மெதுவாக பந்துவீசிய காரணத்தால் அவருக்கு முதல் ஐபிஎல் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதனால், இன்று குஜராத் அணிக்கு எதிராக அகமதாபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் தான் 2025 ஐபிஎல்-ஐ மும்பை அணி கேப்டனாக ஹர்திக் பாண்டியா தொடங்க உள்ளார். கடந்த சீசனில் ஏற்பட்ட கசப்பான விமர்சனங்களை எதிர்கொண்டு தலைமையேற்று வெல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
முதல் போட்டியில் குஜராத் அணி பஞ்சாப் அணிக்கு எதிராகவும், மும்பை அணி சென்னைக்கு எதிராகவும் தோல்வியை சந்தித்துள்ளதால், இந்த போட்டியில் இரு அணிகளுமே வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் விளையாட உள்ளது என்பது குறிப்பிட தக்கது. இன்று இரவு 7.30 மணியளவில் இப்போட்டி தொடங்க உள்ளது.