GT vs MI : அரைசதம் அடித்து அசத்திய சுதர்சன்… மும்பை அணிக்கு 197 ரன்கள் இலக்கு.!
மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணியின் தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் அரைசதம் அடித்து அசத்தினார்.

அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடி வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் வெற்றிக் கணக்கைத் தொடங்கவில்லை. இதனால், இந்த போட்டியில் வெல்ல இரு அணிகளும் முனைப்பு காட்டி வருகிறது.
முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, அதிரடியாக விளையாடி வந்த குஜராத்தின் தொடக்க பார்ட்னர்ஷிப்பை கேப்டன் ஹர்திக் உடைத்தார். குஜராத் கேப்டன் சுபமன் கில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர், ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் நமன் தீரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
மேலும், தொடக்க ஆட்டக்காரராக நிதானமாக விளையாடி வந்த ஜோஸ் பட்லர் 24 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரை முஜீப் உர் ரஹ்மான் பெவிலியனுக்கு அனுப்பினார். பின்னர், களமிறங்கிய இளம் வீரர் சாய் சுதர்சன் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். அவர் 4 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடித்துள்ளார். இது ஐபிஎல் 2025ல் அவர் அடிக்கும் இரண்டாவது தொடர்ச்சியான அரைசதமாகும்.
இதனுடன், ஷாருக் கான் 7 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து அவுட்டாகினார். ஆரம்பத்தில் நிதனமாக விளையாடிய குஜராத் இறுதி நேரத்தில் மளமளவென சரிய தொடங்கின. 18வது ஓவரின் கடைசி பந்தில் சாய் சுதர்ஷன் அவுட்டானார். 41 பந்துகளில் 63 ரன்கள் எடுத்த பிறகு அவர் பெவிலியன் திரும்பினார்.
19வது ஓவரின் முதல் பந்தில் 179 ரன்கள் எடுத்திருந்தபோது ராகுல் தெவாத்தியா ரன் அவுட் ஆனார். ஒரு பந்து கூட விளையாடாமல் பூஜ்ஜியத்தில் பெவிலியன் திரும்பினார். ராகுல் தெவாத்தியாவை ஹர்திக் பாண்ட்யா ரன் அவுட் செய்தார்.
இதன் பிறகு, தீபக் சாஹரின் பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்றபோது ஷர்பான் ரூதர்ஃபோர்டு பவுண்டரியில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மும்பை அணி தரப்பில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இறுதியில், குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 196 ரன்கள் எடுத்து, 197 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.