#IPL2022: மும்பை அணி அதிரடி தொடக்கம்.. குஜராத் அணிக்கு 178 ரன்கள் இலக்கு!
இன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி வரும் நிலையில், இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 177 ரன்கள் எடுத்தது.
ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் 51-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் – ரோஹித் ஷர்மா களமிறங்கினார்கள். இந்த கூட்டணி, தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிவந்தது.
இதில் 28 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ரோஹித் சர்மா தனது விக்கெட்டை இழக்க, அதிரடி ஆட்டக்காரர் சூரியகுமார் யாதவ் களமிறங்கினார். 13 ரன்கள் மட்டுமே எடுத்து சூரியகுமார் யாதவ் வெளியேற, மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த இஷான் கிஷன் 29 பந்துகளில் 45 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழந்தார். அவரைதொடர்ந்து களமிறங்கிய பொல்லார்டு 4 ரன்கள் எடுத்து வெளியேற, திலக் வர்மா 21 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழக்க, அதிரடியாக ஆடிவந்த டிம் டேவிஸ், 21 பந்துகளுக்கு 44 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.
இறுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது குஜராத் அணி பேட்டிங் செய்யவுள்ளது.