ஜக்மோகன் டால்மியா முதல் ஷஷாங்க் மனோகர் வரை! ஐசிசி தலைவர்களாக இருந்த இந்தியர்கள்!
சென்னை : சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) தலைவர்களாக இதுவரை எத்தனை இந்தியர்கள் இருந்தார்கள், அவர்கள் யார் யாரென்று இதில் காணலாம்.
இந்த ஆண்டின் இறுதியில் ஐசிசியின் தலைவருக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் அடுத்த தலைவராக தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருக்கும் ஜெய்ஷா பொறுப்பேற்க அதிக வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் இன்று வெளியாகி இருந்தது. இது உறுதியானால் மிகச் சிறிய வயதில் சர்வேதச கிரிக்கெட் கவுன்ஸிலின் தலைவரான பெருமையை ஜெய்ஷா பெறுவார்.
தற்போது வரை ஜெய்ஷா இந்தப் பதவிக்குப் போட்டியிடுவாரா இல்லையா என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை, இது குறித்து வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி தகவல் வெளியாகும். சர்வேதச கிரிக்கெட் கவுன்ஸில் பல நாடுகளிலிருந்து தலைவர்களாகப் பொறுப்பேற்று பணியாற்றியிருக்கின்றனர். அதே போல இது வரை மொத்தம் 4 இந்தியர்கள் தலைவர்களாகப் பொறுப்பேற்று இருக்கின்றனர். ஐசிசியின் தலைமை பொறுப்பு என்பது ஒரு மிகப்பெரிய பொறுப்பாகும்.
ஜக்மோகன் டால்மியா
இந்தப் பட்டியலில் முதலாவதாக ஜக் மோகன் டால்மியா இருக்கிறார். கடந்த 1997- ஆண்டு ஐசிசியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் 2000-ம் ஆண்டு வரை அந்த தலைவர் பதவியிலிருந்த அவர் கிரிக்கெட் தொடர்பான பல நல்ல விஷயங்களைச் செய்தார். மேலும், ஐசிசி தலைவராகத் தேர்வான முதல் ஆசியர் என்ற பெருமையும் இவர் பெற்றுள்ளார். தற்போது, அவர் நம்முடன் இல்லை என்றாலும் அவர் இந்திய கிரிக்கெட்டிற்காக ஆற்றிய பணிகள் எப்போதும் நம்முடன் இருக்கும்.
சரத் பவார்
இந்தப் பட்டியலில் 2-வதாக பிரபல சரத்பவாரின் பெயர் உள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை ஐசிசியின் தலைவராக பணியாற்றினார். மேலும், இவர் ஐசிசி தலைவராவதற்கு முன்பு, 2005 முதல் 2008 வரை பிசிசிஐயின் செயலாளராகவும் பணியாற்றினார். கிரிக்கெட் துறையில் நீண்ட காலம் பணியாற்றிய சரத் பவார் 2016-ம் ஆண்டு அந்த பதவியிலிருந்து நீங்கினார்.
இதற்கு முக்கிய காரணம், கடந்த 2016-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் லோதா கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையில், 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் கிரிக்கெட் நிர்வாகி பதவியில் இருக்கக் கூடாது என்று அறிவித்தது. அதனால், சரத் பவார் கிரிக்கெட் அந்த பதவியிலிருந்து விலகினார்.
N.சீனிவாசன்
இந்த பட்டியலில் 3-வதாக ஐபிஎல் தொடரின் நட்சத்திர அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இணை உரிமையாளரான சீனிவாசன் இருக்கிறார். கடந்த 2014-ம் ஆண்டில் ஐசிசி தலைவராகப் பதவியேற்ற ஸ்ரீனிவாசன் மிக குறுகிய காலமே பணியாற்றினார். அதாவது 2014-ம் ஆண்டு பதவியேற்ற இவர் அடுத்த ஆண்டு 2015-ல் அந்த பொறுப்பிலிருந்து விலகினார்.
ஷஷாங்க் மனோகர்
இந்த பட்டியலில் கடைசி மற்றும் 4வதாக இடம் பெற்றவர் ஷஷாங்க் மனோகர் அவர். கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை ஐசிசியின் தலைவராக பணியாற்றினார். தொடர்ந்து 2 ஆண்டுகள் பணியாற்றிய இவர் அதன் பிறகு அந்த தலைவர் பதவியை விட்டு விலகினார்.
ஷஷாங்க் மனோகர், அதற்கு முன் 2 முறை பிசிசிஐ செயலாளராகவும் பணியாற்றியிருக்கிறார். கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2011 வரை பிசிசிஐ செயலாளராக பணியாற்றி விட்டு விலகிய அவர் பின் 2015-ம் ஆண்டு அக்டோபர் முதல் 2016-ம் ஆண்டு மே மாத வரை மீண்டும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.