“சாம்பியன்ஸ் டிராபிக்கு கண்டிப்பா சஞ்சு சாம்சன் தேவை” வேண்டுகோள் வைத்த முன்னாள் வீரர்கள்!
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்களான சஞ்சய் பங்கர், சஞ்சய் மஞ்ச்ரேக்கர் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் சரியாக வழங்கப்படாதது ஒரு பெரிய கேள்விக்குறியான விஷயமாகவே உள்ளது என்று சொல்லலாம். ஒவ்வொரு முக்கியமான போட்டிகளில் விளையாடவிருக்கும் இந்திய வீரர்கள் பற்றிய விவரம் அறிவிக்கப்படும்போதெல்லாம் அதில் சஞ்சு சாம்சன் பெயர் இருக்குமா? என்று தான் ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.
அப்படி தான் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர் இடம்பெறுவாரா என்கிற கேள்வியும் எழும்பி இருக்கிறது. பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி 2024-25 க்கு ரோஹித் ஷர்மா தலைமையிலான அணியின் மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சன் இடம்பெறவேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தெரிவித்து வருகிறார்கள். சஞ்சுசாம்சன் அணியில் இடம்பெறவேண்டும் என எந்த வீரர்கள் பேசியிருக்கிறார்கள் என்பது பற்றி பார்ப்போம்..
சஞ்சய் பங்கர்
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் பங்கர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியபோது ” சஞ்சுசாம்சனின் ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் பார்ம் பற்றி பார்க்கும்போது அவர் நன்றாக வைத்திருக்கிறார். சராசரி 50 -க்கு மேல் இருப்பதன் காரணமாக நம்பர் 4-வது இடத்தில் விளையாடுவதற்கு அவரை நீங்கள் தேர்வு செய்யலாம். அது மட்டுமின்றி அவரை போல பார்மில் இருக்கும் நபரை அணிக்கு தேர்வு செய்தால் கண்டிப்பாக அது பக்க பலமாக இருக்கும்” எனவும் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.
சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இது குறித்து பேசுகையில் ” நான் சாம்சன் மீது நல்ல விசுவாசி பலமுறை அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும் என்று கூறியிருக்கிறேன். அதைப்போல தான் இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அவருடைய பெயர் இடம்பெறவேண்டும் என நான் விரும்புகிறேன். எனவே, கடைசி 10 ஓவர்களுக்கு இந்தியா ஒரு பெரிய ஹிட்டரை விரும்பினால் கண்டிப்பாக கண்ணைமூடி கொண்டு சஞ்சு சாம்சன் பெயரை தேர்வு செய்யலாம்” எனவும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவுள்ள இந்திய வீரர்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் சஞ்சு சாம்சன் பெயர் இடம்பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.