திடீர் நெஞ்சுவலி;தீவிர கண்காணிப்பில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்..!
பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்குக்கு ஆஞ்சியோபிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், பேட்டிங் வீரருமான இன்சமாம் உல் ஹக்குக்கு கடந்த மூன்று நாட்களாக நெஞ்சு வலி இருந்தது.இதனால், லாகூரில் உள்ள மருத்துவமனைக்குச் சென்ற அவருக்கு நடத்தப்பட்ட ஆரம்பக்கட்ட பரிசோதனையில் ஏதும் தெரியவில்லை.இதனையடுத்து, மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து,மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து,51 வயதான இன்சமாம்க்கு,ஆஞ்சியோபிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது நலமாக உள்ளதாக கூறப்படுகிறது. எனினும்,இன்சமாம் தற்போது தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.
1992 உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியில் இன்சமாம் ஒருவராக இருந்தார்.அவர் பாகிஸ்தானின் ஒருநாள் போட்டிகளின்படி,375 போட்டிகளில் 11,701 ரன்கள் எடுத்தார்.மேலும், 119 டெஸ்ட் போட்டிகளில் 8829 ரன்கள் எடுத்து டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றார்.
அவர் 2001 மற்றும் 2007 க்கு இடையில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்தார்,.கடந்த 2007 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் பாகிஸ்தானில் பல பதவிகளை வகித்துள்ளார்.குறிப்பாக,மிக சமீபத்தில் 2016 மற்றும் 2019 க்கு இடையில் அணியின் தலைமைத் தேர்வாளராக இருந்தார்.அந்த வகையில்,2017 சாம்பியன்ஸ் கோப்பையை பாகிஸ்தான் வென்றபோது பாகிஸ்தான் அணியின் தலைமை தேர்வாளராக இன்சமாம் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.