ரச்சின் ரவீந்திராவுக்கு, சச்சினின் பெயர் உதவியிருக்கலாம் – ராகுல் டிராவிட்
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவின் சிறப்பான ஆட்டம் குறித்து இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார். 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியது. அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை, கடந்த உலகக்கோப்பையில் இரண்டாவது இடம் பிடித்த நியூசிலாந்து அணி எதிர்கொண்டது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக வில் யங் டக் அவுட் ஆனார். அதன்பிறகு இந்திய வம்சாவளி (பெங்களூரை சேர்ந்தவர்) வீரரான ரச்சின் ரவீந்திரா களமிறங்கி, டெவான் கான்வேயுடன் அதிரடியாக ஆடினார். இருவரும் அடுத்தடுத்து சதமடித்தனர்.
பின்னர் 36.2 ஓவரில் 283 ரன்கள் எடுத்து நியூசிலாந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இப்போட்டியில் டெவான் கான்வே 121 பந்துகளில் 152 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 96 பந்துகளில் 123 ரன்களும் எடுத்து அசத்தினர். இதில் குறிப்பாக உலககோப்பையில் முதல் போட்டியில் விளையாடிய ரச்சின் ரவீந்திரா அறிமுக போட்டியிலேயே அதிரடியாக சதமடித்து அசத்தினார்.
இந்திய வம்சாவளி வீரரான ரச்சின் ரவீந்திராவின் பேட்டிங் குறித்து குறித்து பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவின் சிறப்பான ஆட்டம் குறித்து இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கருத்து கூறியுள்ளார். எனது பெயரையும், சச்சின் பெயரையும் சேர்த்து வைத்துள்ள நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 5 சிக்ஸர்கள் விளாசியுள்ளார், நான் ஒருபோதும் அப்படி சிக்ஸர் விளாசியதாக எனக்கு நினைவில்லை, ஒருவேளை சச்சினின் பெயர் அவருக்கு உதவியிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்தியாவுக்கும் தனக்கும் வலிமையான பந்தம் இருப்பதாகவும், ஆனால் நான் முழுவதுமாக ஒரு நியூசிலாந்து வீரர் என ரச்சின் ரவீந்திரா கூறியிருந்தார். ரச்சினின் தந்தை ரவி கிருஷ்ணமூர்த்தி, இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர். பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றியா அவர், 90களில் அவர் நியூசிலாந்து நாட்டிற்கு இடம் பெயர்ந்தார். அவர் பெங்களூரில் உள்ளூர் போட்டிகளில் ஆடிய அனுபவம் கொண்டவர்.
கிரிக்கெட் மீது கொண்ட ஆர்வம் மற்றும் ராகுல் டிராவிட், சச்சின் மீதான ஈர்ப்பால் தன் மகனுக்கு அவர்கள் இருவரின் பெயரையும் சேர்த்து வைத்துள்ளார். ராகுல் டிராவிட் என்ற பெயரில் இருந்து “ரா” வையும், சச்சின் என்ற பெயரில் இருந்து “ச்சின்”- னையும் இணைத்து ரச்சின் என அவருக்கு பெயர் வைத்து இருக்கிறார். இதனால், நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா குறித்து தெரிந்துகொள்ள இதனையத்தில் தேடி வருகின்றனர்.