துலிப் டிராபி : ருதுராஜ் அணிக்கு முதல் வெற்றி! இந்தியா-D அணியை வீழ்த்தி அபாரம்!
நடைபெற்று வரும் துலிப் ட்ராபியின் 2-ஆம் போட்டியில் இந்தியா C அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பெற்றுள்ளது.
சென்னை : இந்தியாவின் உள்ளூர் தொடர்களில் ஒன்றான துலிப் ட்ராபி தொடர், கடந்த செப்டம்பர் 5-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா-A vs இந்தியா-B மற்றும் இந்தியா-C vs இந்தியா-D என 2 போட்டிகள் அன்றைய நாளில் தொடங்கப்பட்டது.
இதில் நடைபெற்ற ஒரு போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா C அணியும், ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்தியா D அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்தியா D அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
முதல் இன்னிங்ஸிலேயே சற்று சறுக்கல்களை சந்தித்த இந்தியா D அணி, இந்தியா C அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 48.3 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 164 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்தியா C அணி பேட்டிங்கில் வலுவான ஸ்கோரை செட் செய்வார்கள் என நினைத்த போது அந்த அணியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன் காரணமாக இந்தியா C அணி அவர்களது முதல் இன்னிங்ஸில் 62.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 168 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் வெறும் 4 ரன்கள் மட்டுமே இந்தியா C அணியால் முன்னிலை பெற முடிந்தது. அதன் பிறகு 2-ஆம் இன்னிங்ஸ் தொடங்கிய போது ஒரு வலுவான தொடக்கத்தையும், பொறுமையான ஆட்டத்தையும் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் வெளிப்படுத்தினார்கள்.
முதல இன்னிங்க்ஸை விட இந்தியா D அணி 2-வது இன்னிங்ஸில் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி சற்று அதிகம் கவனம் செலுத்தி விளையாடியது. இதன் காரணமாக 58.1 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்த போது 236 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த இன்னிங்சில் இந்தியா-D அணியில் அதிகபட்சமாக தேவதூத் படிக்கல் 56 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 54 ரன்களும் எடுத்திருந்தனர். இந்தியா C அணியில் அதிகபட்சமாக மனவ் சுதர் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். கடைசியில் இந்தியா C அணிக்கு 233 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா D அணி.
டெஸ்ட் போட்டிகளில் இது மிகவும் எளிதான ஸ்கோர் என்பதால் இதனை சேஸ் செய்வதற்கு இந்தியா C அணி பேட்டிங் களமிறங்கியது. இதில் கேப்டன் ருதுராஜ் கெய்வாடும், சாய் சுதர்சனும் நல்ல ஒரு தொடக்கத்தை தொடங்கி வைத்தனர்.
மேலும், சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்ததால் இந்தியா C அணிக்கு பெரிதளவு பாதிப்பு 2-ஆம் இன்னிங்ஸ் பேட்டிங்கில் ஏற்படவில்லை. மறுமுனையில் இந்தியா D அணி கடுமையான முயற்சிகள் எடுத்தும் இந்தியா C அணியை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதன் காரணமாக, இந்தியா C அணி 61 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 233 என்ற இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா C அணியில் அதிகபட்சமாக களமிறங்கிய அனைத்து பேட்ஸ்மேனும் நன்றாகவே விளையாடி அணிக்கு வெற்றியை தேடித்தந்துள்ளனர்.
அதன்படி, ருதுராஜ் 46 ரன்களும், ஆர்யன் ஜுயல் 47 ரன்களும், ரஜத் பட்டிதார் 44 ரன்களும் அபிஷேக் போரேல் 35 ரன்களும் எடுத்திருந்தனர். 6 விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும் இறுதியாக அபிஷேக் போரேலும், மனவ் சுதர் காலத்தில் பொறுமையாக விளையாடி வெற்றிக்கு வித்திட்டனர்.
அதே போல இந்தியா D அணியின் சரண்ஷ் ஜெயின் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். மேலும், இந்த வெற்றியின் மூலம் நடைபெற்று வரும் துலிப் டிராபி தொடரில் முதல் அணியாக, முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது இந்தியா C அணி. அடுத்ததாக வரும் செப்-12ம் தேதி இந்தியா C அணி, இந்தியா B அணியை எதிர்கொண்டு விளையாட இருக்கிறது.