கண்கலங்க வைக்கும் அப்பாவின் தியாகங்கள்…விக்னேஷ் புத்தூரிடம் தோனி சொன்னது என்ன?
சென்னைக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு தோனி தன்னை சந்தித்து என்ன பேசினார் என்பது பற்றி மும்பை சுழற்பந்துவீச்சாளர் விக்னேஷ் புத்தூர் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

சென்னை : கடந்த மார்ச் 23-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றாலும் கடைசி நேரத்தில் போராடி தான் வெற்றிபெற்றது. 24 வயதான இடது கை சுழற்பந்து வீச்சாளர் விக்னேஷ் புத்தூர் தன்னுடைய சுழற்பந்துவீச்சில் சென்னை அணியை மிரள வைத்தார் என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், அந்த போட்டியில் மும்பை அணி குறைவான ரன்கள் எடுத்தபோதில் கடைசி வரை போட்டியை எடுத்து சென்றது அவருடைய பந்துவீச்சு தான். 4 ஓவர்கள் பந்து வீசிய அவர் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
இவருடைய அசத்தலான பந்துவீச்சை பார்த்து சென்னை அணியின் லெஜெண்ட் தோனி கூட மைதானத்தில் வைத்தே அவரிடம் எதோ பாராட்டி பேசிக்கொண்டு இருந்தார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதனை பார்த்த இணயவாசிகள் தோனி என்ன சொல்லியிருப்பார் என யோசிக்க தொடங்கிவிட்டார்கள்.
இதுவரை அங்கு என்ன நடந்தது என்று தெரியாமல் இருந்த நிலையில், தற்போது தோனி அவரிடம் என்ன சொன்னார் என்பது குறித்த தகவல் கிடைத்திருக்கிறது. ஆட்டத்திற்கு பிறகு, எம்.எஸ். தோனி, விக்னேஷை அழைத்து “உன்னோட பயணம் மற்றும் உன் தந்தையோட தியாகம் பற்றி கேள்விப்பட்டேன். நீ இப்படி கஷ்டப்பட்டு இங்க வரை வந்திருக்கிறது பெரிய விஷயம். இதே மாதிரி உழைப்பை தொடர்ந்து காட்டு, நீ இன்னும் பெரிய உயரத்தை அடைவாய்” என்று பாராட்டியது தெரியவந்துள்ளது.
தோனியின் இந்த பாராட்டு விக்னேஷுக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணமாக அமைந்தது. அவர் பின்னர் ஒரு பேட்டியில், “தோனி சார் என்னை பாராட்டினது என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம். அவர் என்னை பற்றி பேசியது எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கு. இன்னும் சிறப்பாக விளையாடி அவரை பெருமைப்படுத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்றும் சமீபத்திய பேட்டி ஒன்றில் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
தந்தையின் தியாகங்கள்!
விக்னேஷின் தந்தை, தனது மகனின் கிரிக்கெட் கனவை நனவாக்குவதற்காக பல தியாகங்களை செய்தார். உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் ஆட்டோரிக்ஷா ஓட்டுநராக இருந்த அவர், காலை முதல் இரவு வரை வேலை செய்து, சிறிய வருமானத்தில் இருந்து விக்னேஷுக்கு கிரிக்கெட் விளையாட தேவையான பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார்.
விக்னேஷை பயிற்சி மைதானங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக, அவரது தந்தை தனது வேலை நேரத்தை தியாகம் செய்து, மைதானங்களுக்கு அழைத்துச் செல்வார். சில சமயங்களில், பயிற்சிக்காக வெளியூர்களுக்கு செல்ல வேண்டியிருந்தபோது, அவரது தந்தை ஆட்டோவையே பயண வாகனமாக பயன்படுத்தி அழைத்துச் செல்வார்.
பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, உணர்ச்சி ரீதியாகவும் விக்னேஷுக்கு பக்கபலமாக இருந்தார் அவரது தந்தை. விக்னேஷ் தோல்வியை சந்திக்கும்போது அல்லது மனம் தளர்ந்து போகும்போது, அவரது தந்தை அவரை ஊக்கப்படுத்தி, “நீ ஒரு நாள் பெரிய ஆளாக வருவாய்” என்று நம்பிக்கை அளித்திருக்கிறார். அவருடைய நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றியாக அவருக்கு மும்பை அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்து அவருடைய திறமையும் இப்போது வெளியே தெரிய தொடங்கியுள்ளது.