ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!
நீண்ட மாதங்களுக்கு பிறகு இங்கிலாந்து அணிக்காக கிரிக்கெட் விளையாட வந்த ஜோப்ரா ஆர்ச்சர் நேற்றைய போட்டியில் 2 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை போட்டியில் விளையாடி இருந்தார். ஆனால், அதில் அவர் சிறப்பாக விளையாடவில்லை. அதனைத் தொடர்ந்து முக்கிய தொடரான ஆஷஸ் தொடரிலும் அவர் விளையாடி இருந்தார்.
அந்த தொடரில் விளையாடி கொண்டிருக்கையில், அவருடைய முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பிரச்சினை ஏற்பட்டது. இதனால், சில மாதங்கள் எந்த ஒரு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்தார்.
அதன் பிறகு நீண்ட நாட்களுக்கு பின் ஜோப்ரா ஆர்ச்சர் தற்போது இங்கிலாந்து – ஆஸ்ரேலியா அணிகளுக்கு இடையே நடக்கும் 5 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறார். இதில், முதல் போட்டியில் விளையாடிய அவர் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
ஆனால், அடுத்த போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும், 3-வது போட்டியும் மழையால் நடைபெறாமல் போனது. அதன்பிறகு மீண்டும் நேற்று, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியில் இடம்பெற்றார்.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்காக மீண்டும் அவர் களமிங்கினார். நீண்ட நாட்களாக அவர் விளையாடாமல் இருந்ததால் அவர் மீது எதிர்மறையான விமர்சனம் எழுந்து இருந்தது. மேலும், அதற்கு பதில் சொல்ல சரியான நேரத்திற்கு காத்திருந்த அவருக்கு நேற்றையப் போட்டியில் வாய்ப்பு கிடைத்தது.
அதை சரியாக பயன்படுத்திய அவர் நேற்று விளையாடிய போட்டியில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 முக்கியமான விக்கெட்களை வீழ்த்தி அசத்தி இருந்தார். இதன் மூலம் எதிர்மறையான விமர்சனத்திற்கும் பதிலடி கொடுத்தார். மேலும், இந்த போட்டி முடிந்த பிறகு நெகிழ்ச்சியாக சில விஷயங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசிய போது, “நான் கோடை மாதத்தில் அணிக்கு திரும்பி விளையாட நினைத்தேன். ஆனால், திரும்பி வருவதற்கு இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது. தற்போது, நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன். என்னுடைய முழு ஈடுபாட்டை நான் இனி விளையாடும் போட்டிகளில் கண்டிப்பாக கொடுப்பேன்.
நான் இல்லாத இந்த காலகட்டத்தில் அணியில் சில மாற்றங்களை பார்க்க வித்தியாசமாக இருக்கிறது. ஏனென்றால், காயத்தில் இருந்த போது என்னுடைய பெயருக்கு பதில் புது புது இளம் வீரர்களுடைய அணியில் இருந்தது.
அதன்பிறகு திடீரென பழைய வீரர்களுடன் என்னுடைய பெயரும் அணியில் இருந்தது. இதனை பார்த்தவுடன் சற்று மகிழ்ச்சியடைந்தேன். இவ்வளவு நாள் அணிக்காக பந்து வீசாமல் இருந்ததை நினைத்து பார்க்க கூட முடியவில்லை.
எப்படியாவது மீண்டும் அணிக்கு திரும்பி மீண்டும் பந்து வீச வேண்டும் என நினைத்தேன். அது நடந்து விட்டது. அதனால், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்”, என ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சியுடன் பேசியிருந்தார்.