ENGvsAUS : 4-வது ஒருநாள் போட்டி! ஒரே ஓவர் தான் …ஆனால் 2 வெவ்வேறு சாதனை!
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அந்த மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
லார்ட்ஸ் : ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடிய 4-வது ஒருநாள் போட்டியானது நேற்று லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்றது. மழையால் 50 ஓவர்கள் அடங்கிய போட்டி 39 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் முதலில் டாஸ்ஸில் தோல்வியடைந்து பேட்டிங் விளையாடிய இங்கிலாந்து அணி 39 ஓவர்களில் இமாலய இலக்கான 312 ரன்கள் எடுத்தது.
இந்த இமாலய இலக்கை செட் செய்வதற்கு இளம் கேப்டன் ஹாரி புரூக் (87 ரன்கள்), லிவிங்ஸ்டோன் (62 ரன்கள்), டக்கெட் (63 ரன்கள்) உட்பட அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடினார்கள். மேலும், இந்த போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்யும் போது கடைசி ஓவரான 39-வது ஓவரில் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு வெவ்வேறு சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளது.
அது என்னவென்றால் கடைசி ஓவரை இடது கை வேகபந்து வீச்சாளரான ஸ்டார்க் வீசினார். அப்போது ஸ்ட்ரைக்கில் லிவிங்ஸ்டோன் இருந்தார். அந்த ஓவரில் வீசிய முதல் பந்தை 6 அடித்து தொடங்கி வைத்தார். மேலும், 2-வது பந்தை டாட் செய்த லிவிங்ஸ்டோன் அடுத்ததடுத்து ஸ்டார்க் வீசிய பந்தை 6, 6, 6, 4 என பவுண்டரிகளை தெறிக்க விட்டு அசத்தினார்.
அந்த கடைசி ஓவரில் மட்டும் லிவிங்ஸ்டன் 28 ரன்கள் அடித்திருப்பார். இதன் மூலம், லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு ஓவரில் அதிக ரன்களை அடித்த வீரர் என்ற பெருமையும், சாதனையையும் படைத்தார் லிவிங்ஸ்டோன்.
அதே போல, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இதுவரை ஒரு ஓவருக்கு 26 ரன்கள் கொடுத்ததே மோசமான சாதனையாக இருந்தது. ஆனால், ஸ்டார்க் வீசிய அந்த ஓவரில் 28 ரன்கள் கொடுத்ததால் ஒரு ஓவரில் அதிக ரன்கள் கொடுத்த ஆஸ்திரேலியா வீரர் என்ற மோசமான சாதனையைப் படைத்தார் மிட்சல் ஸ்டார்க்.
இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஓவரில் இரண்டு வெவ்வேறு சாதனைகள் படைக்கப்பட்டது. மேலும், 25 பந்துகளில் 50 ரன்களை கடந்த லிவிங்ஸ்டோன் லார்ட்ஸ் மைதானத்தில் சர்வ்தேச ஒருநாள் போட்டிகளில் அதிவேக அரை சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
மேலும், அதே லார்ட்ஸ் மைதானத்தில் எதிராக 39 ஓவர்களில் 312 ரன்கள் அடித்ததனால், ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி செட் செய்த அதிகபட்ச ஸ்கோராகவும் பார்க்கப்படுகிறது. இரு அணிகளுக்குமான இந்த தொடரின் கடைசி மற்றும் 5-வது போட்டியானது நாளை பிரிஸ்டோலில் உள்ள கௌண்டி மைதானத்தில் நடைபெறவுள்ளது.