ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் டிராவிஸ் ஹெட் சதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் அடங்கிய தொடரை விளையாடி வருகிறது. இதற்கு முன் இரு அணிகளுக்கும் இடையே நடந்த டி20 தொடரானது 1-1 என சமநிலையில் முடிந்தது.
அதை தொடர்நது நேற்று இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி, இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஃபில் சாலட்டும், டக்கெட்டும் களமிறங்கினார்கள். சால்ட் அதிரடியாக விளையாடுவர் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால், பென் டக்கெட் எதிர்பாராத ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அதே நேரம் அவருடன் கூட்டணி அமைத்த வில் ஜாக்ஸ், உறுதுணையாக களத்தில் விளையாடினர். சிறப்பாக விளையாடிய இருவரும் அணியின் ஸ்கோரை உச்சத்துக்கு எடுத்து சென்றனர். ஆனால், துரதிஷ்டவசமாக டக்கெட் 95 ரன்களுக்கும், வில் ஜாக்ஸ் 62 ரன்களும் எடுத்திருந்தனர்.
இவர்களை தொடர்ந்து அணியில் அடுத்ததாக களமிறங்கிய மற்ற வீரர்களும் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால், 350 ரன்களுக்கும் மேலாக இலக்கை நிர்ணயிப்பார்கள் என எதிர்பார்த்த போது ஆஸ்திரேலிய அணியின் கடைசி 10 ஓவர் சிறப்பான பந்து வீச்சால் அதை கட்டுப்படுத்தினார்கள்.
இதனால், 49.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 315 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணியில் சிறப்பாக பந்து வீசிய ஆடம் ஜாம்பா மற்றும் லாபுசேன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். அதன் பிறகு 316 என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரர்கள் களமிறங்கினர்கள்.
4-வது ஓவரிலேயே தொடக்க வீரரும் அணியின் கேப்டனுமான மிட்சல் மார்ஷ் 10 ரங்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் 32 ரன்களுக்கும், க்ரீன் 32 ரன்களும் எடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர்.
ஆனால், மறுமுனையில் நிலைத்து தொடக்க வீரரான ஆடிகொண்டிருந்த டிராவிஸ் ஹெட் அரை சதம் கடந்த பிறகு, வழக்கம் போல அவரது ருத்ரதாண்ட ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் இணைந்து விளையாடிய லாபுசேன் இறுதி வரை உறுதுணையாக நின்று விளையாடினர். இவர்களின் பார்ட்னெர்ஷிப்பை இங்கிலாந்து பவுலர்கள் பல முயற்சிகள் செய்தும் முறிக்க முடியவில்லை.
இதனால், 3 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணி 44 ஓவர்களில் 317 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 129 பந்துகளில் 154* ரன்களும், லாபுசேன் 61 பந்துகளில் 77 ரன்களும் எடுத்திருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் அடங்கிய இந்த ஒருநாள் தொடரை 1-0 என முன்னிலை பெற்றுள்ளது ஆஸ்திரேலிய அணி.