ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

இன்று நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரிலும் முன்னிலை பெற்று வருகிறது.

ENGvsAUS , 2nd ODI

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் இன்று இந்தத் தொடரின் 2-வது ஒருநாள் போட்டி தொடங்கியது.

இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்ய ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. கடந்தப்  போட்டியில் அதிரடியாக விளையாடிய ஹெட் இந்த போட்டியில் 29 ரன்களுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

அதே போல் அவருடன் களமிறங்கிய ஷார்ட் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு அணியின் கேப்டனான மிட்சல் மார்ஷ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது நிதான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா அணி சற்று எழுச்சி பெற்றது.

மறுமுனையில் ஸ்டீவ் ஸ்மித், லாபுஷன் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அலெக்ஸ் கேரி அதிரடி கலந்த நிதான விளையாட்டை வெளிப்படுத்தினார். மார்ஷ், கேரி இருவரின் கூட்டணியால் ஆஸ்திரேலியா அணி 200 ரன்களைக் கடந்தது.

நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்சேல் மார்ஷ் 60 ரன்களுக்கும், அணியின் விக்கெட் கீப்பரான அலெக்ஸ் கேரி 74 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர். இவ்விருவரைத் தவிர்த்து அடுத்தடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் சொற்பரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனால் 44.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து ஆஸ்திரேலியா அணி 270 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியை பொறுத்த வரையில் பிரைடான் கேஸ் மூன்று விக்கெட்டில் கைப்பற்றி இருந்தார். 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என முனைப்புடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.

ஆனால், கடந்தப் போட்டியை போலவே இந்த போட்டியிலும் இங்கிலாந்து அணியில் எந்த ஒரு பேட்ஸ்மேனும் நிலைத்து விளையாடாமல் விக்கெட்டுகளை கோட்டை விட்டனர். மேலும், தொடக்க வீரர்களே சொதப்பிய நிலையில் அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் அவர்களது பங்கிற்கு சிறு சிறு ரன்களை மட்டுமே எடுத்தனர்.

ஆஸ்திரேலியா அணியின் அபாரமான பந்துவீச்சால் இங்கிலாந்து அணி மோசமாக தடுமாறி விளையாடி வெறும் 202 ரன்கள் மட்டுமே எடுத்து 10 விக்கெட்டுக்களையும் இழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய அணியில்  சிறப்பாக பந்து வீசிய மிட்சல் ஸ்டார்க் 3 விக்கெட்டும், ஹாசில்வுட், ஹார்டி மற்றும் மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருந்தனர். அதே நேரம் இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக க்ரேமி ஸ்மித் 49 ரன்கள் எடுத்திருந்தார்.இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலைப் பெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்