ENGvsAUS : ‘ட்ராவிஸ் ஹெட்’ அபாரம்! முதல் டி20 போட்டியை வென்றது ஆஸ்திரேலியா!
இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சவுத்தாம்ப்டன் : ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தில் சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறது. இதில், 3 டி20 போட்டிகளும், 5 ஒரு நாள் போட்டிகளும் நடைபெறுகிறது. அதன்படி இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, பேட்டிங் செய்ய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான ஹெட்டும், ஷாட்டும் களமிறங்கினர். தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்தனர்.
அதில் மிகச் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஹெட் 23 பந்துக்கு 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மிட்செல் மார்ஷ் 2 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அதன்பிறகு ஸ்டாய்னிஸ் 37 ரன்கள் எடுக்க அடுத்தடுத்து களமிறங்கிய பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.
டிராவிஸ் ஹெட்டுக்கு அடுத்தபடியாக ஷார்ட் 26 பந்துக்கு 41 ரன்கள் எடுத்திருந்தார். இறுதியில், 19.3 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து அணியின் லிவிங்ஸ்டோன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து 180 ரன்கள் அடித்தால் வெற்றி எனக் களமிறங்கியது இங்கிலாந்து அணி. தொடக்கம் முதலே இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்து கொண்டே வந்தது. அதிலும் மறுமுனையில் எந்த ஒரு பேட்ஸ்மேனும் நிதானத்துடன் விளையாடாமல் ரன்ஸ் எடுக்கக் கோட்டை விட்டனர்.
ஒரு பக்கம் லிவிங்ஸ்டோன் மட்டும் நின்று தனியாகப் போராடினார். ஆனால், அவரும் 37 ரன்களில் ஆட்டமிழக்கப் போட்டி கைவிட்டுப் போனது. இதனால், இங்கிலாந்து அணி மீதம் உள்ள ஓவர்களை தட்டி தட்டியே ரன்களை சேர்த்தது. இதனால், 19.2 ஓவர்களில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக சீன் அபோட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதனால், ஆஸ்திரேலிய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியை வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். மேலும், 3 போட்டிகள் இந்த டி20 தொடரை ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.