தொடர் வெற்றியை குவிக்கும் இங்கிலாந்து மகளிர் அணி! தென்னாபிரிக்க அணிக்கு எதிராக அசத்தல் வெற்றி!
இன்று நடைபெற்ற மகளிர் டி20 உலக கோப்பை போட்டியில், இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறது.
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 மகளிர் கோப்பையின் 9-வது போட்டியில் இன்று இங்கிலாந்து மகளிர் அணியும், தென்னாப்பிரிக்க மகளிர் அணியும் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.
அதன்படி பேட்டிங் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி தொடக்கத்தை நன்றாக அமைத்தாலும், அதைத் தொடர்ந்து மளமளவென விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. தென்னாப்பிரிக்கா அணியில் களமிறங்கிய எந்த ஒரு வீராங்கனையும் போதிய நிதானத்துடன் விளையாடாததால் அந்த அணி ரன்ஸ் எடுக்க திணறியது.
ஆனாலும் தொடக்க வீராங்கனையான லாரா வோல்வார்ட் மட்டும் நின்று 42 ரன்கள் குவித்தார். இறுதியில், 20 ஓவருக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்கள் எடுத்தது தென்னாப்பிரிக்க மகளிர் அணி. மேலும், அந்த அணியில் லாராவைத் தொடர்ந்து மேரிசன் 26 ரன்களும், அன்னரி டெர்க்சன் 20 ரன்களும் எடுத்திருந்தனர்.
சிறப்பாக பந்து வீசிய இங்கிலாந்து அணியில் சோஃபி எக்லெஸ்டோன் 2 விக்கெட்டும், லின்சி ஸ்மித், சார்லி டீன், சாரா க்ளென் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றி இருந்தனர். அதனைத் தொடர்ந்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது இங்கிலாந்து மகளிர் அணி. தொடக்கத்தை மிகவும் நிதானமாக தொடங்கிய இங்கிலாந்து மகளிர் அணி, 5 ஓவரிலேயே ஒரு தொடக்க வீராங்கனையை இழந்தது.
அவரைத் தொடர்ந்து அடுத்ததாக 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஆலிஸ் கேப்ஸி 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பிறகு, 3-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டேனியல் வியாட்-ஹாட்ஜ் மற்றும் நாட் ஸ்கிவர்-பிரண்ட் இணைந்து அந்த அணிக்கு தேவையான ரன்களை மிகவும் நிதானமாக கட்டி தட்டி சேர்த்தனர்.
தேவையான நேரத்தில் தக்க பவுண்டரியுடன் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 19.2 ஓவர்களில் 125 ரன்கள் என்ற இலக்கை எடுத்தது. அந்த அணியில் இறுதிவரை களத்தில் விளையாடிய டேனியல் வியாட்-ஹாட்ஜ் 43 ரன்களும், நாட் ஸ்கிவர்-பிரண்ட் 48 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வழி வகுத்தனர்.
தென்னாப்பிரிக்கா அணியில் எந்த ஒரு வீரரும் அந்த அளவுக்கு சிறப்பான பந்துவீச்சை கொடுக்கவில்லை. இதன் காரணமாக இங்கிலாந்து மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்த போட்டியை வென்று அசத்தியது.
மேலும், இந்தத் தொடரின் 2-வது போட்டியை வென்றதுடன் புள்ளிப்பட்டியலிலும் இங்கிலாந்து மகளிர் அணி முதலிடம் வகித்து வருகிறது. அதேபோல தென்னாப்பிரிக்க அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 3-வது இடத்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.