ஸ்காட்லாந்தை பந்தாடிய இங்கிலாந்து மகளிர் அணி! 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!
இன்று நடைபெற்ற மகளிர் டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியின் வீராங்கனையான பௌச்சியர் 62 ரன்கள் விளாசி அதிரடிக் காட்டினார்.
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் இன்று 17-வது போட்டியில் இங்கிலாந்து அணியும், ஸ்காட்லாந்து அணியும் மோதியது.இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங் களமிறங்கிய ஸ்காட்லாந்து மகளிர் அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதைப் போல நிதான விளையாட்டை விளையாடியது. அந்த அளவிற்கு இங்கிலாந்து மகளிர் அணியின் பௌலிங் ஸ்காட்லாந்து அணிக்கு நெருக்கடியை அமைத்தது.
ஸ்காட்லாந்து அணியில் கேப்டனான கேத்ரின் பிரைஸ் மட்டும் நின்று 33 ரன்கள் சேர்த்தார். அவரைத் தொடர்ந்து சாரா பிரைஸ் 27 ரன்களும், சசிகா ஹார்லி 13 ரன்களும் எடுத்திருந்தனர். இதனால், 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 150 ரன்கள் மட்டுமே ஸ்காட்லாந்து மகளிர் அணி எடுத்தது.
இங்கிலாந்து மகளிர் அணியில் சோஃபி 2 விக்கெட்களைக் கைப்பற்றி இருந்தார். இதனைத் தொடர்ந்து, 110 ரன்கள் எடுத்தால் வெற்றியென களமிறங்கியது இங்கிலாந்து மகளிர் அணி. ஸ்காட்லாந்து அணி கடுமையாக பந்து வீசியும் ஒரு விக்கெட்டை கூட எடுக்க முடியாமல் திணறியது.
அந்த அளவிற்கு இங்கிலாந்தின் தொடக்க வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினார்கள். இருவரும் மிக அதிரடியாக விளையாடி வெறும் 10 ஓவர்களிலேயே 113 ரன்களை எடுத்தனர். இதன் மூலம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றியை இந்த தொடரில் பதிவு செய்தது.
இங்கிலாந்து அணியில் மியா பூச்சியர் 34 பந்துக்கு 62 ரன்களும், டேனியல் வியாட்-ஹாட்ஜ் 26 பந்துக்கு 51 ரன்களும் எடுத்திருந்தனர். இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலிலும் ஒரு தோல்விக் கூட பெறாமல் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்து வருகிறது. மேலும் ஸ்காட்லாந்து மகளிர் அணி ஏற்கனவே இந்த தொடரில் இருந்து வெளியேறி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.