AUSvENG : முடிஞ்சா தொட்டுப்பார்.! வெளுத்து வாங்கிய பென் டக்கெட்! ஆஸி.க்கு இமாலய இலக்கு!
இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பென் டக்கெட் 165 ரன்கள் எடுத்திருந்தார்.

லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதுகின்றன. பிற்பகல் 2.30 மணியளவில் லாகூர் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலியா அணியில் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் இல்லாதது பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. அதன் பாதிப்பு ஆட்டத்திலும் எதிரொலித்தது. ஆரம்பம் முதலே இங்கிலாந்து அணி வீரர்கள் சீரற்ற முறையில் அவுட் ஆகினாலும் ரன் குவிக்கும் வேகம் மட்டும் குறைவில்லாமல் இருந்தது.
பிலிப் சால்ட் 10 ரன்னிலும், ஜேமி ஸ்மித் 15 ரன்னிலும், ஹாரி புரூக் 3 ரன்னிலும், கேப்டன் ஜோஸ் பட்லர் 23 ரன்னிலும், லியாம் லிவிங்ஸ்டோன் 14 ரன்னிலும் அவுட் ஆகி வெளியேறினார். ஜோ ரூட் மற்றும் பென் டக்கெட் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். 78 பந்துகளில் 68 ரன்கள் அடித்த ஜோ ரூட், ஜாம்பா பந்துவீச்சில் LBW விக்கெட் ஆனார்.
பென் டக்கெட் கிட்டத்தட்ட இறுதி வரையில் அதிரடியாக விளையாடி 143 பந்துகளில் 17 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் விளாசி 165 ரன்கள் எடுத்து 47.2 ஓவரில் மார்னஸ் லாபுசாக்னே வீசிய பந்தில் LBW விக்கெட் ஆனார். பிரைடன் கார்ஸ் 8 ரன்னில் அவுட் ஆக, ஜோஃப்ரா ஆர்ச்சர் தனது பங்கிற்கு 10 பந்தில் 21 ரன்கள் அடித்தார்.
இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணி சார்பில் பென் டுவார்ஷுயிஸ் 3 விக்கெட்டுகளையும், ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். கிளென் மேக்ஸ்வெல் 1 விக்கெட்டையும், மார்னஸ் லாபுசாக்னே 12 விக்கெட்டையும் வீழ்த்தினார். ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற 50 ஓவர்களில் 352 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் அடுத்ததாக களமிறங்க உள்ளது.