இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையான முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி: நாளை தொடங்குகிறது
உலக கிரிக்கெட்டில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் பிரபலமானதை தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளுக்கான ரசிகர்கள் கூட்டம் குறைந்து வருகிறது. 5 நாட்கள் நடைபெறும் போட்டியை காண மைதானத்திற்கு ரசிகர்கள் வருவதை தவிர்த்து வருகின்றனர். எனவே ரசிகர்களிடம் டெஸ்ட் போட்டிகள் மீது ஈர்ப்பு ஏற்படுத்துவதற்காக பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்தது. இப்போட்டியில் இளம் சிவப்பு நிறத்திலான பந்துகளை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் இந்த முடிவுக்கு ரசிசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் நாளை காலை இங்கிலாந்து – நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே தொடங்கும் டெஸ் போட்டி, பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. ஏற்கனவே ஆஷஸ் தொடரில் பெற்ற தோல்வியை தொடர்ந்து இத்தொடரை இங்கிலாந்து அணி எதிர்கொள்கிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்துள்ள நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர், ”நியூசிலாந்தில் உள்ள ஈடன் பார்க்கில் விளையாடுவதை நான் எப்போதும் விரும்புவேன். 2014ம் ஆண்டு, நாங்கள் இந்தியாவை இங்கு தான் தோற்கடித்தோம். அந்தப் போட்டியில் நான் 8 விக்கெட்டுகள் வீழ்த்தினேன். கடந்த ஆண்டில் இங்கிலாந்துடன் நடந்த டெஸ்டில் 3 விக்கெட்டுகளைச் சாய்த்தேன். எந்த நிற பந்தாக இருந்தாலும் சரி. எங்களுக்குக் கவலை இல்லை. சரியான இடத்தில் பந்துகளை வீசும்போது நீங்கள் நினைத்தது நடக்கும்” என்று தெரிவித்தார்.