#Cricket Breaking: பந்து வீச்சில் மிரட்டிய ஆப்கானிஸ்தான்.. 69 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோல்வி..!

இங்கிலாந்து அணி 40.3  ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 215 ரன்கள் எடுத்து  69 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

உலகக்கோப்பை லீக் தொடரின் 13-வது போட்டியில் இன்று டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் இங்கிலாந்து அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் விளையாடியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தனர். தொடக்க வீரர்களாக இப்ராஹிம் சத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியது முதல் ஒரு புறம்  ஹ்மானுல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடி வந்தார். ஹ்மானுல்லா  விக்கெட்டை பறிக்க முடியாமல் இங்கிலாந்து அணி திணறியது.

ஆனால் மறுபுறம் விளையாடிய இப்ராஹிம் சத்ரான் நிதானமாக விளையாடி வந்த நிலையில், 28 ரன்னில் விக்கெட்டை இழந்தார். ஹ்மானுல்லா குர்பாஸ் விளையாடிய வேகத்திற்கு சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 57 பந்தில் 80 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். அதில்  8 பவுண்டரி , 4 சிக்ஸர் அடங்கும். பின்னர் இறங்கிய ரஹ்மத் ஷா  3 ரன்களும், கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 14 ரன்களும், அஸ்மத்துல்லா உமர்சாய் 19 ரன்களும், முகமது நபி 9 ரன்களும், ரஷீத் கான் 23 ரன்களும் எடுத்து இங்கிலாந்து அணி பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பெவிலியன் திரும்பினர்.

மத்தியில்  இறங்கிய இக்ராம் அலி கில் மட்டும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து 58 ரன்கள் குவித்தார். இறுதியில் 49.5 ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 284 ரன்கள் எடுத்து இருந்தனர். இங்கிலாந்து அணியில் அடில் ரஷித் 3 விக்கெட்களையும், மார்க் வூட் 2 விக்கெட்களையும், ஜோ ரூட், லியாம் லிவிங்ஸ்டன் ரீஸ் டாப்லி ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

285 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மலான்  இருவரும் களமிறங்கினார். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஜானி பேர்ஸ்டோவ் 2 ரன் எடுத்து  அவுட் ஆனார். அடுத்து களம் இறங்கி ஜோ ரூட் வந்த வேகத்தில் இரண்டு பவுண்டரி விளாசி 11 ரன்னில் முஜீப் உர் ரஹ்மான் வீசிய பந்தில் போல்ட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் நிலைத்து நிற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேப்டன் ஜோஸ் பட்லர் வெறும் 9 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

பின்னர் களம் கண்ட லியாம் லிவிங்ஸ்டோன், சாம் கரண் தலா 10 ரன் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தனர். இதனால் இங்கிலாந்து அணி 138 ரன்னிற்கு ஆறு விக்கெட்டை இழந்து தடுமாறி வந்தது. 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஹாரி புரூக் மட்டும் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்து 61 பந்திற்கு 1 சிக்ஸர் , 7 பவுண்டரி என  66 ரன்கள் எடுத்தார். இறுதியாக இங்கிலாந்து அணி 40.3  ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 215 ரன்கள் எடுத்து  69 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஆப்கானிஸ்தான் அணியில் முஜீப் உர் ரஹ்மான், ரஷித் கான் 3 விக்கெட்டும், முஹம்மது நபி  2 விக்கெட்டும் ,  ஃபசல்ஹக் ஃபாரூக்கி , நவீன்-உல்-ஹக் தலா 1 விக்கெட்டை பறித்தனர். இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றியும் , தலா 2 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்