2-ஆம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 56 ரன் முன்னிலை..!
இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 16 ஓவர் முடிவில் விக்கெட்டை இழக்காமல் 43 ரன்கள் எடுத்து உள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இந்தியா -இங்கிலாந்து இடையே 4 டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதனத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில், முதலில் இந்திய அணி பெட்டிங் செய்தது.
இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 61.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் ஷர்துல் தாக்கூர் அதிகபட்சமாக 57 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டும், ராபின்சன் 3 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன், கிரேக் ஓவர்டன் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீது இருவரும் களமிறங்கினர்.
ஆட்டம் தொடங்கி சிறிது நேரத்தில் இருவரும் நடையை காட்டினர். ரோரி பர்ன்ஸ் 5 , ஹசீப் ஹமீது ரன் எடுக்காமலும் வெளியேறினார். அடுத்து டேவிட் மாலன், ஜோ ரூட் களமிறங்க நிதானமாக விளையாடிய வந்த ஜோ ரூட் உமேஷ் வீசிய பந்தில் 21 ரன் எடுத்து போல்ட் ஆனார். முதல் நாள் ஆட்ட இங்கிலாந்து அணி 17 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 53 ரன்கள் எடுத்தனர். இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய உடனே டேவிட் மாலன், கிரேக் ஓவர்டன் இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
பின்னர் மத்தியில் களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோ 37, மொயீன் அலி 35 ரன்கள் எடுத்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த ஒல்லி போப் 81 ரன்கள் எடுத்து ஷர்துல் தாக்கூர் வீசிய பந்தில் போல்ட் ஆனார். பிறகு இறங்கிய கிறிஸ் வோக்ஸ் அரை சதம் விளாசினார். இறுதியாக இங்கிலாந்து அணி 84 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 290 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், ஜடேஜா, பும்ரா தலா 2 விக்கெட்டும், சிராஜ், ஷர்துல் தாக்கூர் தலா ஒரு விக்கெட்டும் பறித்தனர்.
இதனால், இங்கிலாந்து அணி 99 ரன்கள் முன்னிலையில் இருந்த நிலையில் இந்திய அணி தனது 2-வது இன்னிங்க்ஸை தொடங்கியது. இந்திய அணியில் தொடக்க வீரராக ரோகித் சர்மா, கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினர். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 16 ஓவர் முடிவில் விக்கெட்டை இழக்காமல் 43 ரன்கள் எடுத்து உள்ளனர். களத்தில் ரோகித் சர்மா 20, கே.எல் ராகுல் 22 ரன்களுடன் விளையாடி வருகின்றனர். தற்போது இங்கிலாந்து அணி 56 ரன்கள் முன்னிலையில் உள்ளது.