2-ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 345 ரன்கள் முன்னிலை..!
இங்கிலாந்து அணி 129 ஓவரில் 8 விக்கெட் இழந்து 423 ரன்கள் எடுத்து 345 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளிடையே 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து, களமிறங்கிய இந்திய அணி 40.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 78 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், கிரேக் ஓவர்டன் தலா 3, ராபின்சன், சாம்கரண் தலா 2 விக்கெட்டை பறித்தனர்.
பின்னர், தனது முதல் இன்னிங்ஸை இங்கிலாந்து தொடங்கியது. தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீது இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கத்திலே இருந்து இருவரும் சிறப்பாக விளையாடினார். முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 42 ஓவர் முடிவில் விக்கெட்டை இழக்காமல் 120 ரன்கள் எடுத்தனர்.
இவர்களின் விக்கெட்டை பறிக்க முதல் நாளில் இந்திய அணி திணறியது. இந்நிலையில், இன்று 2-ம் நாள் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் ரோரி பர்ன்ஸ் 61 , ஹசீப் ஹமீது 68 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். பின்னர் களமிறங்கிய டேவிட் மாலன், கேப்டன் ஜோ ரூட் இருவரும் கூட்டணி அமைத்து அணியை சிறப்பாக உயர்த்தினர். அதிரடியாக விளையாடி வந்த ஜோ ரூட் சதம் விளாசி 127 ரன்கள் குவித்தார். நிதானமாக விளையாடி வந்த டேவிட் மாலன் 70 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களம் கண்ட ஜானி பேர்ஸ்டோ 29 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய அனைத்து வீரர்களும் நிலைத்து நிற்கவில்லை. இதனால் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 129 ஓவரில் 8 விக்கெட் இழந்து 423 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி 345 ரன்கள் முன்னிலையில் உள்ளது.