தொடர் தோல்வியில் இங்கிலாந்து.. 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி..!
இலங்கை அணி 25.4 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 160 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 25-ஆவது லீக் போட்டி இங்கிலாந்து , இலங்கை இடையில் இன்று பெங்களூரில் உள்ள எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் முதலில் ஜானி பேர்ஸ்டோவ், டேவிட் மாலன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி நிதானமாக விளையாடி அணிக்கு ஓரளவு ரன்கள் எடுத்த நிலையில், டேவிட் மாலன் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஜோ ரூட் சொற்ப ரன் எடுத்து வெளியேறினார்.
இதன்பிறகு பென் ஸ்டோக்ஸ் களமிறங்கி சிறப்பாக விளையாட மறுபுறம் விளையாடி வந்த பேர்ஸ்டோவ் ராஜிதா வீசிய பந்தில் ஆட்டமிழந்து 30 ரன்னில் வெளியேறினார். பின்னர் களம் கண்ட ஜோஸ் பட்லர், லிவிங்ஸ்டோன், மொயின் அலி மற்றும் கிறிஸ் வோக்ஸ் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். நிதானமாக விளையாடி வந்த பென் ஸ்டோக்ஸ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 43 ரன் எடுத்து தனது விக்கெட்டை இழந்து ரசிகர்களை ஏமாற்றினார்.
இறுதியாக இங்கிலாந்து அணி 33.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டை இழந்த 156 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் லஹிரு குமார 3 விக்கெட்டுகளையும், மேத்யூஸ் மற்றும் ராஜிதா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி தொடக்க வீரர்களாக பாத்தும் நிஸ்ஸங்க , குசல் பெரேரா இருவரும் களமிறங்க வந்த வேகத்தில் குசல் பெரேரா 4 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த குசல் மெண்டிஸ் நிலைத்து நிற்பார் என எதிர்பார்த்தபோது 11 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய சதீர சமரவிக்ரம , பாத்தும் நிஸ்ஸங்க உடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இவர்களின் விக்கெட்டை பறிக்க இங்கிலாந்து அணி திணறியது. இதற்கிடையில் இருவரும் அரைசதம் விளாசினார். இறுதியில் இலங்கை அணி 25.4 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 160 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசிவரை களத்தில் ஆட்டமிழக்காமல் சதீர சமரவிக்ரம 65* , பாத்தும் நிஸ்ஸங்க 77* ரன்கள் எடுத்து இருந்தனர்.
இலங்கை அணி 5 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றியும் , 3 போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளி பட்டியலில் 5 -வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி 5 போட்டிகளில் விளையாடி 1 போட்டிகளில் வெற்றியும் , 4 போட்டிகளில் தோல்வியும் அடைந்து புள்ளி பட்டியலில் 9 -வது இடத்தில் உள்ளது.