கிரிக்கெட் உலகில் புதிய சாதனையை படைத்த ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லிஸ் பெர்ரி !
மூன்று போட்டிகள் கொண்ட மகளிர் டி 20 தொடரில் இங்கிலாந்து , ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகிறது. நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் ஆல்ரவுண்டர் எல்லிஸ் பெர்ரி கிரிக்கெட் உலகில் புதிய சாதனை படைத்து உள்ளார்.டி 20 போட்டியில் 1000 ரன்களை கடந்து சாதனை படைத்து உள்ளார்.இப்போட்டியில் எல்லிஸ் பெர்ரி ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் நின்றார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற டி 20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து வீராங்கனை நாடலி ஸ்கிவரை வீழ்த்தி எல்லிஸ் பெர்ரி 100-வது விக்கெட்டை கைப்பற்றினார். ஆண் , பெண் இருபாலருக்கான டி 20 போட்டிகளில் ஆல்ரவுண்டர்களில் 100 விக்கெட் மற்றும் 1000 ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்து உள்ளார்.
டி 20 போட்டிகளில் பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிடி 1498 ரன்களும் ,98 விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தார்.ஆனால் தற்போது அவர் ஓய்வு பெற்று விட்டார்.மேலும் பங்களாதேஷ் அணியின் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் 1471 ரன்களும் ,88 விக்கெட்டையும் எடுத்து விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.