துலிப் டிராபி : சாம்பியன் பட்டம் வென்று “இந்தியா-A” அணி அசத்தல் !
இந்த ஆண்டில் நடைபெற்ற உள்ளூர் தொடரான துலிப் டிராபி தொடரின் கடைசிப் போட்டியில் இந்தியா-A அணி வெற்றிப் பெற்றுள்ளது.
அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3 சுற்றுகளாக நடைபெற்ற இந்த தொடரின் கடைசி போட்யில் இந்தியா-A அணியும், இந்தியா-C அணியும் விளையாடியது. இதில் வெற்றி பெற்ற இந்தியா-A அணி புள்ளிபட்டியலில் முதலிடம் பிடித்து கோப்பையை தட்டி சென்றது.
இந்த தொடரில் இடம்பெற்றுள்ள 4 அணிகளும் இதர அணிகளுடன் ஒருமுறை மோத வேண்டும். இறுதியில் புள்ளிபட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்வார்கள் என்பதே தொடரின் நிபந்தனை ஆகும்.
இந்த நிலையில், ருதுராஜ் தலைமையிலான இந்தியா-C அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று, 2-வது போட்டியில் ட்ரா செய்து 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் வகித்து வந்தது. அதே நேரம் இந்தியா-A அணி 6 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்திலும் இருந்தது.
இந்நிலையில், இந்தியா-C அணி மயாங்க் அகர்வால் தலைமையிலான இந்தியா-A அணியை எதிர்கொண்டு விளையாடியது. கடந்த செப்-19 தொடங்கிய இந்த போட்டியில் இந்தியா-C அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, இந்தியா -A அணி பேட்டிங் செய்து விளையாடியது.
முதல் இன்னிங்ஸில் ஷஷ்வத் ராவத்தின் அமர்க்களமான சதத்தால் (124 ரன்கள்) இந்தியா-A அணி 297 ரன்களை எடுத்தது. பின் தொடர்ந்து பேட்டிங் விளையாடிய இந்தியா-C அணி 234 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின், இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் விளையாடிய இந்தியா-A அணி 286 ரன்களை எடுத்தது.
அதில், மீண்டும் ஷஷ்வத் ராவத்தின் (53 ரன்கள்) நிதானமான விளையாட்டாலும், ரியான் பராக்கின் 73 ரன்களும் 286 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியா-C அணிக்கு 350 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸ்க்கு இலக்கையடைய களமிறங்கிய இந்தியா-C அணியின் பேட்ஸ்மேன்கள் மோசமான விளையாட்டால் சொதப்பினார்கள்.
அதில், அணியின் கேப்டனான ருதுராஜ் மற்றும் தமிழக வீரரான சாய் சுதர்சன் இருவரும் இணைந்து நன்றாகவே விளையாடினார்கள். சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சன் 111 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதே போல ருதுராஜ் 44 ரன்கள் எடுத்திருந்தார்.
இவர்களை தவிர்த்து எந்த வீரரும் பொறுப்புடன் விளையாடமல் போனதால் இந்தியா-C அணி வெறும் 217 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 132 ரன்கள் விதியாசத்தில் அபரா வெற்றியைப் பெற்று “சாம்பியன்” பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. ஒரு வேளை இந்த போட்டி ட்ரா ஆகியிருந்தால் ருதுராஜ் தலைமையிலான இந்தியா-C அணி கோபையை வென்றிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.