துலிப் டிராபி 4-வது ஆட்டம் : இரண்டே பந்தில் ரிட்டையரான ருதுராஜ் கெய்க்வாட்!
இந்தியாவின் உள்ளூர் தொடரான துலிப் டிராபியின் இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று தொடங்கி உள்ளது.
ஆந்திர பிரதேஷ் : இன்று துலிப் டிராபி தொடரின் 4-வது போட்டியில் பேட்டிங் செய்த ருதுராஜ் கெய்க்வாட் சந்தித்த 2-வது பந்திலேயே காயம் ஏற்பட்டு ரிட்டையர் ஆகி இருக்கிறார். இந்த சம்பவம் அவரது ரசிகர்களுக்குச் சற்று வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
உள்ளூர் தொடரான துலிப் டிராபி தொடரின் முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில், இன்று 4-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா B அணியும் இந்தியா C அணியும் இன்று விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா B அணியின் கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.
அதன்படி, இந்தியா C அணியின் ஒப்பனர்களான ருதுராஜ் கெய்க்வாடும், தமிழக வீரரான சாய் சுதர்சனும் களமிறங்கினர். முதல் ஓவர் வீசுவதற்கு வேகப் பந்து வீச்சாளரான முகேஷ் குமார் களம் கண்டார். அப்போது முதல் ஓவரின் முதல் பந்திலேயே ருதுராஜ் பந்தை பவுண்டரிக்கு அடித்துச் சிறப்பான தொடக்கத்தைத் தொடங்கினார்.
ஆனால், அடுத்த பந்தை அவர் தட்டி விட்டு ஓடமுயன்ற போது கனுக் காலில் ஏற்பட்ட காயம் காரணமாகத் தடுமாறினார். இதனால், அவரால் போட்டியில் தொடர்ந்து விளையாட முடியாமல் போனது. மேலும், ரீடர்ட் ஹர்ட் அறிவித்து பெவிலியன் திரும்பினார். அவருக்குப் பதிலாக ரஜத் படிதார் களமிறங்கி சாய் சுதர்சனுடன் விளையாடி வந்தார்.
ருதுராஜ்க்கு ஏற்பட்ட இந்த திடீர் காயம் அவரது ரசிகர்களுக்குச் சற்று வருத்தம் அளிக்கும் செய்தியாக இருந்து வருகிறது. மேலும், இந்த போட்டியில் அவர் தொடர்ந்து விளையாடுவாரா? இல்லையா? என்பதைப் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும். மேலும், இந்த போட்டியில் தற்போது இந்தியா c அணி 31 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.