ஓடி வர மாட்டியா? மைதானத்தில் கடுப்பாகி பேட்டை தூக்கிப்போட்ட ரஷீத் கான்!
ரஷீத் கான் : கிங்ஸ்டவுனில் உள்ள செயின்ட் வின்சென்ட்டில் நடைபெற்ற உலகக்கோப்பை 2024 டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், வங்கதேசம் அணியும் மோதியது. இந்த போட்டியின் போது விரக்தியில் ஒரு கட்டத்தில், ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் தனது பேட்டை கோபத்துடன் தரையில் வீசிய சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த சமயத்தில், ரஷீத் கான் பந்தை எதிர்கொண்டு இரண்டு ரன்கள் ஓட்டத்திற்கு முயற்சி செய்தார். அப்போது, அவருடன் களத்தில் நின்று கொண்டு இருந்த கரீம் ஜனத் இரண்டாவது ரன்னை எடுக்க மறுத்துவிட்டார், இதன் காரணமாக ரஷீத் கான் மிகவும் ஆத்திரம் அடைந்தார்.
இரண்டாவது ரன் எடுக்க பாதி தூரம் ரஷீத் கான் ஓடி வந்த நிலையில், மறுமுனையில் நின்று கொண்டு இருந்த கரீம் ஜனத் வேண்டாம் என்று கூறினார். கடுமையாக கோபப்பட்ட ரஷீத் கான் கூப்பிட்டா ஓடி வரமாட்டியா என்பது போல செய்கை காட்டி கையில் வைத்து இருந்த பேட்டை கோபத்துடன் தூக்கி கரீம் ஜனத் பக்கத்தில் வீசினார். இதனால் கரீம் ஜனத் அதிர்ச்சி அடைந்தார்.
Rashid khan throws his bat on his partner for not taking the second run. #AfgVsBan. pic.twitter.com/09pobNvCvs
— Fawad Rehman (@fawadrehman) June 25, 2024
இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும், இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் பிறகு, மழை அவ்வப்போது குறிக்கிட்டதன் காரணமாக 1 ஓவர்கள் குறைக்கப்பட்டு இலக்கும் 114 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
இதனையடுத்து, பேட்டிங் செய்த வங்கதேசம் அணி 17.5 ஓவர்களில் 10 விக்கெட் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.